பண்டிகை காலத்தில் வீடு புதுப்பிக்கவும், புதிய ஏசி, டிவி, ஃபிரிட்ஜ் வாங்கவும் திட்டமிட்டுள்ளவர்களுக்கு செலவு அதிகரிக்க உள்ளது. அக்டோபர் 1 முதல் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்த உள்ளதால், பண்டிகை காலத்தில் கிடைக்கும் சலுகைகளின் பலனை எதிர்பார்த்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படலாம்.
உற்பத்திச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவது இந்த விலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஏசி உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்ற உலோகங்களின் விலை உயர்ந்துள்ளது. இதனுடன், போக்குவரத்து மற்றும் சரக்கு கட்டணங்களும் அதிகரித்துள்ளன. சர்வதேச சூழலால் கச்சா எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்களின் செலவிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக, அக்டோபர் முதல் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை சுமார் 4 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கலாம். குறிப்பாக ஏசி வகைகளில் நிறுவனத்துக்கு ஏற்ப 5 முதல் 8 சதவீதம் வரை உயர்வு இருக்கலாம். டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களில் சுமார் 3 முதல் 4 சதவீதம் வரை விலை அதிகரிக்கும் நிலை உள்ளது.
சில முன்னணி நிறுவனங்கள் ஏற்கெனவே புதிய விலை நிர்ணயம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ப்ளூ ஸ்டார், கோத்ரேஜ் அப்ளையன்சஸ், ஹையர், டெய்க்கின், சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது பொருட்களின் விலையை உயர்த்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளன. சில நிறுவனங்கள் 4 முதல் 10 சதவீதம் வரையிலான உயர்வை அறிவித்துள்ளன. பானாசோனிக் நிறுவனம் மட்டும் இதுவரை புதிய விலை உயர்வு குறித்து அறிவிக்கவில்லை.
அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலம் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கு முக்கியமானதாகும். தசரா, ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால், இந்த காலத்தில் புதிய பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆனால், ஒருபுறம் பண்டிகை கால கொள்முதல் அதிகரிக்கும் நேரத்திலும், மறுபுறம் பொருட்களின் அடிப்படை விலை உயர்வது டீலர்களுக்கு சவாலாகியுள்ளது. வழக்கமாக பண்டிகை சலுகைகள் மூலம் விற்பனையை அதிகரிக்கும் முயற்சி நடைபெறும் நிலையில், இந்த முறை விலை உயர்வு வாடிக்கையாளர்களின் வாங்கும் முடிவை பாதிக்குமா என்ற கவலை விற்பனையாளர்களிடம் உள்ளது.
2026-ம் ஆண்டில் ஏற்கெனவே இரண்டு முறை வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அக்டோபரில் மீண்டும் விலை மாற்றம் வர உள்ளது. இதனால் பண்டிகை காலத்தில் ஏசி, டிவி, ஃபிரிட்ஜ் அல்லது வாஷிங் மெஷின் வாங்குபவர்கள் புதிய விலையை கணக்கில் கொண்டு பட்ஜெட்டை திட்டமிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
Also Read: “உதவி செய்வதாக கூறி நெருங்கினார்.. என் மகளை சீரழித்துவிட்டார்; மகளின் மரணத்துக்கு அவரே காரணம்” – 12 ஆண்டுகளுக்குப் பிறகு வீரமணி மீது தாய் பரபரப்பு புகார்…



