டெல்லியில் சாலை பணிகளை ஆய்வு செய்தபோது, தன்னை வீடியோ எடுத்த இளைஞரை டெல்லி அமைச்சர் பர்வேஷ் வர்மா அறைந்ததாக வெளியான வீடியோ அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியின் திலக் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் சாலை பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் பர்வேஷ் வர்மா சென்றிருந்தார். அப்போது அங்கு நடைபெற்ற சம்பவங்களை இளைஞர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அவரை அமைச்சர் அறைந்ததாக கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “அந்த இளைஞர் செய்த குற்றம் என்ன? அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் என்பதுதானா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “சாலையில் கேள்வி கேட்டால் அறை; பேப்பர் லீக் குறித்து கேள்வி எழுப்பினால் தடியடி; நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் மைக் அணைப்பு” என பாஜக அரசை விமர்சித்தார்.
தேர்தல் மூலம் தங்களை மக்கள் அகற்ற முடியாது என்ற எண்ணமே பாஜக அமைச்சர்களின் அணுகுமுறையில் ஆணவத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ராகுல் காந்தி தனது பதிவில் குற்றம்சாட்டினார். “தேர்தல் வெற்றியை உறுதியாகக் கருதும் அரசு, மக்களின் ஒப்புதலைக் கேட்காது; அவர்களின் அமைதியையும் கண்மூடித்தனமான ஆதரவையும் எதிர்பார்க்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் பர்வேஷ் வர்மா அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் திலக் நகர் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஜர்னைல் சிங்கும் இருந்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் ஒரு பகுதியை ஜர்னைல் சிங் கையால் பெயர்த்து, சாலை பணியின் தரம் குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அருகில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் சம்பவத்தை செல்போனில் பதிவு செய்துள்ளார். அப்போது பர்வேஷ் வர்மா அந்த இளைஞரை அறைந்ததாக ஜர்னைல் சிங் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.
இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பர்வேஷ் வர்மாவை கைது செய்ய வேண்டும் என்றும், இளைஞரிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பர்வேஷ் வர்மா அளித்த விளக்கம்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பர்வேஷ் வர்மா எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னைல் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், கட்டுமானத்தில் இருந்த விகாஸ் புரி ரிங் ரோடு பணிகளை ஆய்வு செய்யச் சென்றதாக அவர் தெரிவித்தார். சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து அங்கு சென்றதாகவும், தான் அங்கு வந்தபோது ஜர்னைல் சிங்கை நேரில் வருமாறு அழைத்ததாகவும் கூறினார்.
மேலும், ஒப்பந்ததாரருடன் சந்திப்பு ஏற்பாடு செய்து தருமாறும், அதற்காக கமிஷன் பெற்றுத் தருமாறும் ஜர்னைல் சிங் பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் கேட்டதாக பர்வேஷ் வர்மா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக தங்களது பொறியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Also Read: கத்தரிக்காய் வாங்குறீங்களா? அழுத்திப் பார்த்தால் இப்படி இருக்கணும்.. இதுதான் ஃப்ரெஷ்னஸுக்கான அறிகுறி!



