தமிழகத்தில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய 5 தொகுதிகளில் முந்தைய தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மேற்கண்ட 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதித்து கடந்த ஜூலை 10-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது ஒருபோதும் நிரந்தரமானது அல்ல. உயர் நீதிமன்றம் இந்த தேர்தல் வழக்குகளை முடித்து வைத்த உடனேயே தேர்தல் நடத்தப்படும். இதில் பெருந்துறை தொகுதி தொடர்பான வழக்கு கடந்த 8-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், அத்தொகுதி தற்போது காலியானதாகக் கருதப்படுகிறது. எனினும், அந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வரும் நவம்பர் 24-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால், அத்தொகுதி குறித்து தேர்தல் ஆணையமே சட்டப்படி முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 151 (ஏ)-ன் கீழ், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; மாறாக, 6 மாத கால அவகாசம் உள்ளது. மேலும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த தொகுதியை காலியானதாக கருத இயலாது.
ஒவ்வொரு தொகுதிக்கும் மக்கள் பிரதிநிதி அவசியம் என்பதை தேர்தல் ஆணையம் ஏற்கிறது. அதேசமயம், தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதினால் அதை ஆணையம் முழுமையாக வரவேற்கிறது. எனவே, தேர்தல் வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரித்து முடித்த பிறகே திருச்சி கிழக்கு உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தேர்தல் நடத்த உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற முதல்வர் விஜய் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
விசாரணையின்போது முதல்வர் விஜய், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஜனநாயக முறைப்படி அத்தொகுதிகளுக்கு விரைந்து இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். அதேநேரம், திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தரப்பில், நிலுவையில் உள்ள தேர்தல் வழக்கு முடிவுக்கு வராதவரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என வாதிடப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒரு நாள் தள்ளிவைத்தனர்.



