இந்திய வில்வித்தை ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரண்டு முறை தங்கப் பதக்க கொண்டாட்டத்தை கொடுத்துள்ளார் சிகிதா தானிபர்த்தி. மகளிர் அணிப் பிரிவில் தங்கம் வென்ற சில மணி நேரங்களிலேயே, காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். சாஹில் ராஜேஷ் ஜாதவுடன் இணைந்து பெற்ற இந்த வெற்றி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான முக்கிய வாய்ப்பையும் இந்தியாவுக்கு பெற்றுத் தந்துள்ளது.
நகோயாவில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடிக்கு எதிராக தென் கொரியா களமிறங்கியது. தொடக்கம் முதலே இரு அணிகளும் சமமான திறனை வெளிப்படுத்தியதால், போட்டி ஒவ்வொரு சுற்றிலும் பரபரப்பாக மாறியது.
முதல் இரண்டு சுற்றுகளுக்குப் பிறகு இந்தியா 80 புள்ளிகளையும், தென் கொரியா 78 புள்ளிகளையும் பெற்றிருந்தது. இந்தியாவிடம் இருந்த சிறிய முன்னிலை அடுத்த சுற்றில் மேலும் குறைந்தது. இறுதி சுற்றை எட்டியபோது வெற்றியை தீர்மானிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
கடைசி சுற்றில் தென் கொரிய வீரர்கள் துல்லியமாக அம்புகளை செலுத்தியதால், இந்தியாவின் முன்னிலை முற்றிலும் கரைந்தது. இரு அணிகளும் தலா 157 புள்ளிகளைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிந்தது.
இதனால் தங்கப் பதக்கத்துக்கான முடிவு ஷூட்-ஆஃப் மூலம் தீர்மானிக்கப்பட்டது.
இந்தியாவுக்காக சிகிதா முதலில் அம்பு செலுத்தினார். அவர் 10 புள்ளிகளைப் பதிவு செய்தார். தென் கொரிய வீராங்கனையும் 10 புள்ளிகளை எடுத்ததால் பதற்றம் தொடர்ந்தது.
அடுத்த வாய்ப்பு சாஹில் ஜாதவுக்கு. அழுத்தம் நிறைந்த அந்த தருணத்திலும் அவர் 10 புள்ளிகளை குறிவைத்து அடித்தார். தென் கொரிய வீரரால் அதற்கு இணையாக செயல்பட முடியவில்லை; அவரது அம்பு 9 புள்ளிகளில் முடிந்தது.
இதன் மூலம் இந்திய ஜோடி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தது.
இறுதிப்போட்டிக்கு முன்பு அரையிறுதியில் இந்திய ஜோடிக்கு தாய்லாந்து கடுமையான சவாலை கொடுத்தது. வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்திய சிகிதா – சாஹில் ஜோடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்த வெற்றிக்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணி பிரிவு இடம்பெற உள்ள நிலையில், ஆசிய விளையாட்டில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் அந்தப் பிரிவுக்கான இந்தியாவின் முதல் ஒலிம்பிக் quota கிடைத்துள்ளது.
ஒரே நாளில் இரண்டு தங்கங்களை வென்ற சிகிதாவுக்கு இது மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், தென் கொரியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடி வென்ற சிகிதா – சாஹில் ஜோடி இந்திய வில்வித்தையில் மற்றொரு முக்கிய அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது.
Also Read: படத்தையே மிஞ்சும் த்ரில்லர்.. ஓடும் காரின் மீது காவலர்! 40 கி.மீ. திகில் சேசிங்.. நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்..



