பிளைதுபாய் விமானத்தில் நடந்த கடத்தல் முயற்சி மற்றும் தாக்குதலின் போது படுகாயமடைந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை முதலுதவி செய்து காப்பாற்றிய பல் மருத்துவர் முசாவேவ் ஷோதா, அச்சமூட்டும் அந்தத் தருணங்களை பகிர்ந்துள்ளார்.
விமானத்தில் பயணித்த ஒரே மருத்துவ நிபுணரான ஷோதா, தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்த உதவியதுடன், தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த விமானிக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்துள்ளார்.
“இரண்டாகப் பிளந்த கைகள்… அசாத்திய மன உறுதி” இஸ்ரேலிய ஊடகமான ‘Ynet’ மற்றும் ‘CNN’ நிறுவனங்களுக்கு ஷோதா அளித்த பேட்டியில், “விமானத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்த கணமே நான் யோசிக்காமல் காக்பிட் பகுதிக்கு ஓடினேன். விமானி ஸ்மித் மச்சார் கடுமையான ரத்தப்போக்குடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரின் தலையிலும் கைகளிலும் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்தன. கைகள் கிட்டத்தட்ட இரண்டாகப் பிளந்த நிலையில் இருந்தன” என்று விவரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “விமானத்தில் இருந்த ஒரே மருத்துவர் என்பதால், உடனடியாக அவரது ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தினேன். விமானம் தரையிறங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு வரை அவர் நினைவோடு தான் இருந்தார். தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் அவரது உடல்நிலை சற்று மோசமடைந்தது” எனக் கூறினார்.
“குழந்தைகளை நினைத்து பிரார்த்தனை செய்த விமானி” ரத்த வெள்ளத்தில் கிடந்தபோதிலும், விமானி ஸ்மித் மச்சார் சுயநினைவோடு பேசி தங்களுக்கு ஒத்துழைப்பு அளித்ததாக மருத்துவர் ஷோதா தெரிவித்தார்.
“அவர் எங்களிடம் பேசும்போது, தனக்கு 39 வயதாவதாகவும், இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார். தாக்குதல் நடத்தியவர் தன்னைத் தாக்கி சாபமிட்டதாகத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தார். எங்கே அவர் உயிரை இழந்துவிடுவாரோ என்று நான் மிகவும் பயந்தேன்” என ஷோதா வேதனையுடன் குறிப்பிட்டார்.
விமானம் சவூதி அரேபியாவின் தபூக் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட பிறகு, சவூதி மருத்துவக் குழுவினர் அவரைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, உயிர் பிழைத்துள்ளதாகச் சவூதி மருத்துவக் குழு உறுதிப்படுத்தியுள்ளதாக மருத்துவர் ஷோதா தெரிவித்தார்.



