2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாற்றம் உருவாகி இருக்கிறது.. கடந்த 60 ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் விஜய்யின் தவெக தலைமையில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1967ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. 2006 முதல் 2011 வரை திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் அமைச்சரவை அதிகாரப் பகிர்வு நடைபெறவில்லை. ஆனால் இந்த முறை நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.
2026 தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் ‘தொங்கு சட்டமன்ற’ நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில், தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்கத் தயாராகியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது..
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தவெக தலைவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தவெகவின் எம்எல்ஏ எண்ணிக்கை 107 ஆக குறைகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவு மூலம் தவெக அந்த எண்ணிக்கையை கடந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சியின் தலா 2 உறுப்பினர்கள் ஆதரவுடன் விஜய் ஆட்சிமைக்க உள்ளார்.. இதனால் விஜய்க்கான மொத்த ஆதரவு 120 ஆக உயர்ந்துள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று மே 10, 2026 அன்று காலை 10 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்…
ஆனால், அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்படுவது, எம்.ஜி.ஆர் சாதனையை விஜய் முறியடித்தாரா என்ற கேள்விதான். 1977ஆம் ஆண்டு தனது புதிய கட்சியான அதிமுக மூலம் எம்.ஜி.ஆர் தமிழக அரசியலில் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தினார். அதேபோன்று, 2026ஆம் ஆண்டு விஜய் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார்.
1977 தேர்தலில் எம்.ஜி.ஆர் சுமார் 33.5 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். தற்போது விஜய் தலைமையிலான தவெக 34.92 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 1.7 கோடி வாக்குகள் தவெகவுக்கு கிடைத்துள்ளது.
இருப்பினும், தொகுதிகளின் எண்ணிக்கையில் எம்.ஜி.ஆர் முன்னிலையில் உள்ளார். 1977ஆம் ஆண்டு அதிமுக 130 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், அரசியல் தாக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், விஜய் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளதாக பலரும் மதிப்பிடுகின்றனர். எம்.ஜி.ஆர் காங்கிரஸ் ஆதிக்க அரசியலை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்றால், விஜய் திராவிடக் கட்சிகளின் நீண்டகால அரசியல் ஆதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்ததாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஏற்பட்ட ஆதரவு அலையும் தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் தவெகவுக்கு கிடைத்த ஆதரவும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சென்னை மாநகரில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளை தவெக கைப்பற்றியிருப்பது அரசியல் வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மேலும், இரண்டாம் இடத்தில் உள்ள திமுகவை விட சுமார் 60 லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று தவெக முன்னிலை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து, முதல் தேர்தலிலேயே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ள விஜய், தமிழகத்தின் புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார்.. எனினும் விஜய்யின் ஆட்சி மற்றும் நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..



