துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தில், துணை விமானி கேப்டனை கத்தியால் குத்திவிட்டு விமானத்தைக் கைப்பற்ற முயன்றதாக எழுந்துள்ள புகார் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், அவசரமாக சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, ஓமன் நாட்டைச் சேர்ந்ததாகக் கூறப்படும் துணை விமானியை சவுதி அரேபிய அதிகாரிகள் கைது செய்தனர். அவர் சுமார் எட்டு மாதங்களுக்கு முன்புதான் ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட துணை விமானியின் முந்தைய நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. டெய்லி மெயில் வெளியிட்ட தகவலின்படி, அவருடன் பணியாற்றிய சிலர், அவரது நடத்தை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
அவர் மதம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கடுமையான அணுகுமுறையைக் கொண்டிருந்ததாகவும், அடிக்கடி பிரார்த்தனை செய்ததுடன் பெண் ஊழியர்களுடன் கைகுலுக்க மறுத்ததாகவும் சக ஊழியர் ஒருவர் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டதாகத் தகவல் இல்லை.
விமானம் இஸ்ரேலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, துணை விமானி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர், விமானியின் அறைக்குள் மற்றவர்கள் நுழைவதைத் தடுக்கவும், விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றவும் அவர் முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது விமானம் சுமார் 14,000 அடி உயரத்தில் இருந்து 30 விநாடிகளுக்குள் திடீரெனக் கீழிறங்கியதாக விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் தரவுகள் தெரிவிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பலத்த காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார், விமானியின் அறைக் கதவைத் திறக்க உதவியதாகவும், இதையடுத்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தாக்குதல் நடத்திய நபரைக் கட்டுப்படுத்தியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த யானிவ் ஹயூன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, விமானப் பணியாளர்கள் விமானத்தின் கட்டுப்பாட்டைச் சீராக்கினர். விமானத்தில் இருந்த 174 பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.
சவுதி அரேபியாவில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கேப்டன் ஸ்மித் மச்சாரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் நடந்த மோதலுக்கான காரணம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Also Read: வணிக சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. வீட்டு உபயோக சிலிண்டருக்கு புதிய கட்டுப்பாடு!



