அனைத்து சனிக்கிழமைகளிலும் பொதுத்துறை வங்கிகளுக்கு விடுமுறை எனக் கூறி சமூக வலைதளங்களில் பரவி வரும் அரசாணை போன்ற ஆவணம் போலியானது என மத்திய அரசின் பிஐபி உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஆவணத்தில், செப்டம்பர் 30, 2026 என்ற தேதியும் இடம்பெற்றுள்ளது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுமுறை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாணை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆவணம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், இதுபோன்ற எந்த அறிவிப்பையும் நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என பிஐபி உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு உறுதி செய்துள்ளது.
தற்போதைய நடைமுறை என்ன?
பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் மட்டுமே வழக்கமான பொது விடுமுறை நாட்களாக உள்ளன. மற்ற சனிக்கிழமைகளில் வங்கி சேவைகள் வழக்கம்போல் நடைபெறும். இந்த நடைமுறை 2015-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக மாற்றி, வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிப்பதற்கான நடைமுறைகள் குறித்து இந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
3 நாள் வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு UFBU அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
வாரத்தில் 5 நாட்கள் வங்கி செயல்படும் நடைமுறை மட்டுமின்றி, செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (PLI) உள்ளிட்ட விவகாரங்களும் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன. PLI திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதனால் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக மாற்றுவது தொடர்பான விவகாரமே முக்கியமாக தொடர்கிறது.
எனவே, அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்படும் என தற்போது எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் அரசாணை போன்ற ஆவணத்தை நம்ப வேண்டாம் என வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Also Read: “விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்கணும்!”.. டெல்லி சாலையில் படுத்து ரசிகை செய்த காரியம்!



