தமிழக அரசியலில் தலைவர்களின் பேச்சு மட்டுமல்ல, அவர்கள் அணியும் ஆடைகளும் அரசியல் அடையாளங்களாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சர்களின் உடை, அவர்கள் மக்களிடம் காட்ட விரும்பிய அரசியல் முகவரியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
காம்ராஜர் முதல் மு.க.ஸ்டாலின் வரை பாரம்பரியமான வேட்டி சட்டையை அணிந்து வந்த நிலையில், தற்போது முதலமைச்சராக பதவி ஏற்ற விஜய், சட்டமன்றத்திற்கு முதல் முறையாக வெள்ளை சட்டை, கருப்பு கோட் மற்றும் பேண்ட் அணிந்து வந்தது தமிழக அரசியலில் பேசுபொருளானது. தமிழக முதலமைச்சர்களின் ஆடை பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
காமராஜரின் எளிமை: தமிழக அரசியலில் “எளிமை” என்ற வார்த்தைக்கு அரசியல் முகம் கொடுத்த தலைவர்களில் முதன்மையானவர் கே. காமராஜர். இன்று வரை தமிழக அரசியலில் பல தலைவர்கள் எளிமை அரசியல் பற்றி பேசும்போது, முதலில் நினைவுக்கு வருவது காமராஜரின் தோற்றமும் வாழ்க்கை முறையும் தான்.
அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை என்ற மிக எளிய உடையிலேயே மக்களிடம் தோன்றினார். அந்த உடை அவரின் அரசியல் அடையாளமாகவே மாறியது. அவரது உடையில் எந்த ஆடம்பரமும் இருக்காது, விலை உயர்ந்த கடிகாரம் அல்லது அலங்காரங்கள் இருக்காது, அரசியல் பிரமாண்டத்தை காட்டும் தோற்றமும் இருக்காது. இந்த எளிமையே அவரை சாதாரண மக்களிடம் மிக நெருக்கமாக மாற்றியது.
அண்ணா உருவாக்கிய வெள்ளை அரசியல்: அண்ணா அணிந்த வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை மற்றும் கருப்பு ஷால் என்பது வெறும் உடை பாணி அல்ல; அது திராவிட இயக்கத்தின் அரசியல் மொழியாகவே பார்க்கப்பட்டது. அவர் தோன்றிய மேடை எதுவாக இருந்தாலும், எளிமையான வெள்ளை உடையுடன் கருப்பு ஷாலை தோளில் போட்டு பேசும் தோற்றம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது.
அண்ணாவின் உடையில் மிக முக்கியமாக பேசப்பட்டது அவரது கருப்பு ஷால். திராவிட இயக்கத்தில் கருப்பு நிறம் என்பது எதிர்ப்பு, சமூக நீதி மற்றும் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான சின்னமாக பார்க்கப்பட்டது.
கருணாநிதியின் மஞ்சள் துண்டு: மு. கருணாநிதி என்றாலே மக்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருவது அவரது மஞ்சள் துண்டும் கருப்பு கண்ணாடியும் தான். தமிழக அரசியலில் உடையையே ஒரு தனித்த அரசியல் அடையாளமாக மாற்றிய தலைவர்களில் முக்கியமானவர் கருணாநிதி. ஆரம்ப காலங்களில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டையில் தோன்றிய அவர், பின்னர் தோளில் அணிந்த மஞ்சள் துண்டை தனது நிரந்தர அடையாளமாக மாற்றினார்.
எம்.ஜி.ஆரின் சினிமா ஸ்டைல் அரசியல்: எம்.ஜி. ராமச்சந்திரன் வெள்ளை உடை, கருப்பு கண்ணாடி மற்றும் வெள்ளை தொப்பியுடன் மக்களிடம் தனித்த அடையாளத்தை உருவாக்கினார். சினிமா இமேஜை அரசியலிலும் வெற்றிகரமாக பயன்படுத்திய முதல் பெரிய தலைவர் என்ற பெயரும் அவருக்கே உண்டு.
ஜெயலலிதாவின் ஆடம்பரமற்ற அதிகார தோற்றம்: ஜெ. ஜெயலலிதா எப்போதும் கேப் வடிவ சேலை அணிந்து அதிகாரமும் கட்டுப்பாடும் நிறைந்த தோற்றத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆடை தேர்வு “அம்மா” என்ற அரசியல் பிம்பத்துடன் நேரடியாக இணைந்திருந்தது. எளிமையுடன் அதிகாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒற்றை நிற சேலைகளை அதிகமாக அணிந்த அவர், தனது உடை பாணியிலேயே தனித்த அரசியல் அடையாளத்தை உருவாக்கினார்.
பொதுக்கூட்டங்கள், சட்டமன்றம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் தோன்றிய விதம், கட்டுப்பாடு மற்றும் தலைமைத்துவத்தை பிரதிபலிப்பதாக ஆதரவாளர்கள் கருதினர். தமிழக அரசியலில் பெண்தலைவராக வலுவான பிம்பத்தை உருவாக்கிய ஜெயலலிதாவின் தோற்றம், இன்று வரை அதிமுக அரசியல் அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடியின் பாரம்பரிய பாணி: ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி இருவரும் தமிழக அரசியலில் பாரம்பரியமான வெள்ளை வேட்டி-சட்டை பாணியை தொடர்ந்து பின்பற்றிய தலைவர்களாக பார்க்கப்படுகின்றனர். கிராமத்து எளிமை, நிலத்தோடு இணைந்த வாழ்க்கை மற்றும் சாதாரண மக்களோடு நெருக்கமாக இருக்கும் தோற்றத்தை அவர்கள் தங்களது அரசியல் அடையாளமாக வைத்திருந்தனர். அதிக ஆடம்பரம் இல்லாத வெள்ளை உடை, எளிய நடைமுறை மற்றும் அமைதியான தோற்றம் ஆகியவை அவர்களின் அரசியல் பிம்பத்தை வலுப்படுத்தின. குறிப்பாக கிராமப்புற மக்களிடம் “நம்ம ஊர் மனிதர்” என்ற உணர்வை உருவாக்கும் வகையில் அவர்களின் உடை பாணி அமைந்திருந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மு.க.ஸ்டாலின்: திமுகவின் பாரம்பரியமான வெள்ளை வேட்டி-வெள்ளை சட்டை பாணியை தொடர்ந்து பயன்படுத்தியிருந்தாலும், அதை இளம் தலைமுறைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து அணிந்திருப்பார். ஸ்டாலினின் முக்கிய அடையாளங்களில் ஒன்று முழுக்கை வெள்ளை சட்டை. ஆனால் அதை சாதாரணமாக அணிவதில்லை. பெரும்பாலும் கைகளை மடித்து அணிவது அவரது நிரந்தர பாணியாக மாறியுள்ளது.
மேற்கத்திய பாணியில் விஜய்: இந்த நீண்ட பாரம்பரியத்தில், விஜயின் கருப்பு கோட்-சூட் தோற்றம் முற்றிலும் வேறுபட்ட அரசியல் மொழியை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. வெள்ளை சட்டையை தக்க வைத்தபடியே மேற்கத்திய பாணி கருப்பு கோட் மற்றும் பேண்ட் அணிந்திருந்தது, “பாரம்பரியமும் நவீனமும் கலந்த அரசியல்” என்ற இமேஜை உருவாக்குகிறது.
இந்திய அரசியலில் தலைவர்களின் ஆடை என்பது வெறும் உடை அல்ல; அது ஒரு அரசியல் அறிக்கை. மக்கள் மனதில் பதியும் வகையில் ஒவ்வொரு தலைவரும் தங்களுக்கென ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அந்த வகையில், தமிழக அரசியலில் வெள்ளை வேட்டி-சட்டை மரபுக்குள் “கோட்-சூட்” பாணியை கொண்டு வந்த விஜய், தனது அரசியல் பயணத்திலும் தனித்த அடையாளத்தை உருவாக்க முயற்சிக்கிறார் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.



