பொதுத்தேர்தல் முடிந்து 5 மாதங்களுக்குள்ளாகவே வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு ஆளுங்கட்சிக்கு விலைபோனதால்தான் தாராபுரத்தில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் பொதுத்தேர்தல் முடிந்து 4 மாதங்கள் கூட இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை; அதற்குள் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் எதற்காக வரவேண்டும்? இந்த வீண் விரயத்திற்கும் தேர்தல் திணிப்பிற்கும் யார் காரணம் என்பதை வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்” என்றார்.
பொதுவாக ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இறந்தால் மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். ஆனால் தாராபுரத்தை பொறுத்தவரை அப்படியொரு சூழல் உருவாகவில்லை. மக்கள் தங்களுக்குப் பிரதிநிதியாக வாக்களித்துத் தேர்ந்தெடுத்த வேட்பாளர், மக்களின் தீர்ப்பையும் ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டதால் இந்த தேர்தல் வந்துள்ளது. ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் ஆளுங்கட்சிக்கு விலைபோனதன் விளைவாகவே தாராபுரம் தொகுதி மக்கள் மீது இடைத்தேர்தல் சுமத்தப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டினார்.
மேலும், “வாக்களித்த மக்களின் விரலில் வைக்கப்பட்ட அழியாத மை காய்வதற்கு முன்பாகவே, மக்கள் நம்பிக்கைக்கு விரோதமாக செயல்பட்டு வேறு கட்சிக்கு ஓடிப்போனவரை தொகுதி மக்கள் ‘பெட்டி பாமா’ என்றும் ‘பல்டி பாமா’ என்றும் விமர்சித்து வருகின்றனர். தனது சுயலாபத்திற்காக கட்சி மாறிய இத்தகைய நபர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்” என்று விமர்சித்தார்.
Read More : குட் நியூஸ்..!! அனைத்துப் பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!



