ரஷ்யாவின் எல்லை மற்றும் தன்னாட்சிப் பகுதிகள் மீது நேரடித் தாக்குதல் தொடுக்கப்பட்டால், தங்களின் வசம் உள்ள அணு ஆயுதங்கள் உட்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். குறிப்பாக, பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் முக்கிய ராணுவ மையமான கலினின்கிராட் பகுதியை NATO நாடுகள் தனிமைப்படுத்தவோ அல்லது தாக்குதல் நடத்தவோ முயன்றால், அதற்குப் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று மாஸ்கோ திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கலினின்கிராட் பகுதி NATO அமைப்பில் உள்ள போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ஒரு முக்கிய ரஷ்ய நிலப்பகுதியாகும். இங்கு ரஷ்யாவின் பால்டிக் கடற்படை, ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய நிலப்பரப்போடு நேரடியாக நிலவழியாக இணையாத இந்த பகுதி, புவிசார் அரசியலில் ஒரு முக்கிய ராணுவ மையமாகவும், எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கக்கூடிய ஆபத்தான பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள அதிபர் புதின், அதேவேளையில் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் கைவசம் உள்ள அனைத்துப் படைகளையும் கொண்டு எதிர்கொள்வோம் எனக் கூறியுள்ளார். கலினின்கிராட் பகுதிக்கும் ரஷ்யாவின் பிரதான நிலப்பரப்பிற்கும் இடையிலான தொடர்பைத் துண்டிக்க முயற்சித்தால், அது ரஷ்யா மற்றும் NATO அமைப்பிற்கு இடையே நேரடிப் போருக்கு வழிவகுக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், கடலுக்கு அடியில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் முகமாக பால்டிக் பிராந்தியத்தில் NATO தனது ராணுவ இருப்பை கணிசமாக அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் இந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள NATO அமைப்பு, “நாங்கள் ஒரு தற்காப்பு கூட்டமைப்பு மட்டுமே; ரஷ்யா தனது பொறுப்பற்ற அணு ஆயுத மிரட்டல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தால் பால்டிக் பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.



