அரிசி விலை கிடுகிடு உயர்வு! மூட்டைக்கு ரூ.500 வரை எகிறியது! கிலோ ரூ.100-ஐ தொடும் அபாயம்!

most expensive rice

பருவமழை பற்றாக்குறை, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி மற்றும் வெளிமாநில வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் சன்ன ரக அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரியில் ரூ.1,350 வரை விற்கப்பட்ட 26 கிலோ எடைகொண்ட சன்ன ரக அரிசி மூட்டை, தற்போது சில்லறை விற்பனையில் பிராண்டுகளுக்கு ஏற்ப ரூ.1,800 முதல் ரூ.2,250 வரை விற்கப்படுகிறது. கிலோவுக்கு ரூ.3 வரை மொத்த விலையில் கூடியுள்ளதால், பண்டிகை காலத்தில் குடும்ப பட்ஜெட் எகிறி இல்லத்தரசிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப உள்ளூரில் நெல் உற்பத்தி இல்லாத சூழலில், சன்ன ரக தேவைக்காக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால் நடப்பாண்டில் ‘எல் நினோ’ தாக்கத்தால் நாடு முழுவதும் பருவமழை குறைந்து நெல் சாகுபடி பரப்பு சரிந்ததும், அதேநேரத்தில் வெளிநாடுகளுக்கான இந்திய அரிசி ஏற்றுமதி கணிசமாக அதிகரித்ததுமே இந்த தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. போதிய வரத்து இல்லாததால் ஆலைகளுக்கு கொள்முதல் விலையும் உயர்ந்து, உற்பத்திச் செலவு எகிறியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்குள் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ அரிசி ரூ.100-ஐத் தொடும் அபாயம் உள்ளதாக தொழில் துறையினர் எச்சரிக்கின்றனர். ஆந்திராவில் டிசம்பரிலும், தமிழகத்தின் சம்பா அறுவடை பொங்கலிலும் மட்டுமே சந்தைக்கு வரும் என்பதால், உடனடி விலை வீழ்ச்சிக்கு வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்காவிட்டால், பண்டிகை காலத்தில் விலை மேலும் 10 சதவீதம் வரை உயரும் அபாயம் நிலவுகிறது.

Read More : தாய்மாமன் தங்க மோதிரம் எங்கே? செவிலியரை மண்வெட்டியால் கொடூரமாக தாக்கிய வாலிபர்..!! கும்பகோணத்தில் அதிர்ச்சி..!!

You May Like