குழந்தைகளை உறவினர்கள், நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் வீட்டில் விட்டுச் செல்லும்போது கூட பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வெளிப்படையாக நம்பகமானவர்களாக தோன்றுபவர்களே சில நேரங்களில் கொடூர குற்றங்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் 8 வயது சிறுவன் கொலை வழக்கில் வெளியான நீதிமன்ற தீர்ப்பு இதை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில், 2023-ம் ஆண்டு 8 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய தீர்ப்பை மேற்கு கேப் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், மற்றொரு பாலியல் குற்றத்திற்காக கூடுதலாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. விசாரணையில், கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம், சிறுவன் தனது நண்பரின் வீட்டில் இரவு தங்கியிருந்தபோது, நண்பனின் தந்தை சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், குற்றத்தை மறைக்கும் முயற்சியாக சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில், உயிரிழந்த சிறுவனின் நண்பர் அதே அறையில் இருந்த மற்றொரு படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தது வழக்கில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவலாக பதிவாகியுள்ளது. வழக்கு விசாரணையின்போது, குற்றவாளி ஏற்கனவே பல பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர் என்பதும், நீண்ட காலமாக சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதனை கருத்தில் கொண்ட நீதிமன்றம், குற்றத்தின் தீவிரத்தை சுட்டிக்காட்டி கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.
ஆயுள் தண்டனையுடன், மற்றொரு பாலியல் குற்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது பெயர் தேசிய பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இனி குழந்தைகள் தொடர்பான எந்தப் பணியிலும் ஈடுபடவும், துப்பாக்கி வைத்திருக்கவும் அவருக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் குற்றவாளி பரோல் கோரி விண்ணப்பித்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை உயிரிழந்த சிறுவனின் தாயாருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படாது என்பதற்கான வலுவான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
Also Read: “அம்மா… வலிக்குது மா!” 3 வயது பிஞ்சின் உயிரை பறித்த தாயின் கள்ளக்காதலன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!



