கும்பகோணம் அருகே ‘தாய்மாமன் தங்க மோதிரத்தை’ உடனடியாக தர வேண்டும் எனக் கூறி, கிராம சுகாதாரச் செவிலியரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை கும்பகோணம் அடுத்த முழையூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அலமேலு (35). கிராம சுகாதாரச் செவிலியராக பணியாற்றி வரும் இவரது வீட்டின் அருகே வசித்து வரும் மதன் – வனிதா தம்பதிக்கு கடந்த 16-ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. அரசு நடைமுறைப்படி, குழந்தை பிறந்த தேதியின் அடிப்படையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும் என ஏற்கெனவே மதனிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனது குழந்தையின் பெயர் சூட்டுதல் மற்றும் வழிபாட்டு நிகழ்வு இன்று வீட்டில் நடைபெற உள்ளதால், பூஜையில் வைத்து வழிபட தங்க மோதிரத்தை இப்போதே உடனே தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என செவிலியர் அலமேலுவிடம் மதன் பிடிவாதமாக தகராறு செய்துள்ளார்.
செவிலியர் அலமேலு, “குழந்தை பிறந்த தேதியின் முன்னுரிமை அடிப்படையில் முறைப்படி அரசுத் துறை அதிகாரிகள் நேரில் அழைத்துதான் மோதிரத்தை வழங்குவார்கள்; என்னால் உடனடியாகக் கொடுக்க முடியாது” என தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்த மதன், மதுபோதையில் அலமேலுவின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து அலமேலு, அவரது சித்தி சுஜாதா மற்றும் சகோதரர் சுமன் ஆகிய மூவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் சுஜாதாவின் தலையிலும், சுமனின் கையிலும் பலத்த ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. மேலும் செவிலியர் அலமேலுவுக்கு தலை மற்றும் கை, கால்களில் பலத்த உள்காயங்கள் ஏற்பட்டன. படுகாயமடைந்த மூவரும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பட்டீஸ்வரம் போலீசார், தலைமறைவான மதனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



