இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்யக்கோரியும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோதான் எடுக்கப்பட வேண்டும் என இடைக்கால உத்தரவிடக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோஹனா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
மனுதாரர்களான சைலேந்திர மணி திரிபாதி, ராகேஷ் குமார் சிங் மற்றும் சுதாகர் சிங் ஆகியோருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், “தேர்தல் ஆணையம் என்பது பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இதன் முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோதான் எடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய சட்டத் திருத்தங்கள் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறார். பிரதமருக்குக் கூட இல்லாத சட்டப் பாதுகாப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஞானேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதி, “அவரை சஸ்பெண்ட் செய்தால் ஆணையம் எவ்வாறு இயங்கும்? செய்தித்தாளில் வெளியான அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே எங்களால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. அந்தச் செய்தி அறிக்கை 100% சரியாக இருக்கலாம், பகுதி சரியாக இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம்” என்று தெரிவித்தது.
மேலும், நீதிபதிகள் கூறுகையில்: “சட்டத்தின்படிதான் ஆணையம் இயங்க வேண்டும். நோட்டீஸிற்குப் பிறகு, ஒருமனதான முடிவுகள் இன்றி தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அந்த முடிவுகளை நீதிமன்றம் உடனடியாக ரத்து செய்து திரும்பப் பெறும். 10 நாட்களில் எதுவும் மாறப்போவதில்லை, தவறு நடந்திருந்தால் அதைச் சரிசெய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது” என்று தெளிவுபடுத்தினர்.
வழக்கின் பின்னணி என்ன?
பாட்னாவைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், மனு மீதான விசாரணை முடியும் வரை மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒருமனதான முடிவுகளின் அடிப்படையில் ஆணையம் இயங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
கடந்த செப்டம்பர் 25 அன்று வெளியான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி அறிக்கையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறுபரிசீலனை (SIR) தொடர்பாகத் தங்களுக்குத் தெரியாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்கு எதிராக மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை தங்களின் அதிகாரப்பூர்வ எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், பல்வேறு கருத்துகள் எழுவது ஓர் அமைப்பில் இயல்பான ஒன்று என்றும், ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றியே எடுக்கப்படுகின்றன என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது. இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.



