உத்தரப் பிரதேச மாநிலம் விரிந்தாவனில் உள்ள குடியிருப்பு குருகுலத்தில் நிலத்தடி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 5 மாணவர்களில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நச்சு வாயு தாக்கியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரா மாவட்டம் விரிந்தாவனின் சைதன்ய விஹார் பகுதியில் இந்த குருகுலம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் வளாகத்திலேயே தங்கி வருகின்றனர்.
குருகுல வளாகத்தில் இருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அதை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 12 முதல் 14 அடி ஆழம் கொண்ட அந்த தொட்டியில் முதலில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
தொட்டிக்குள் சிறிதளவு தண்ணீர் இருந்த நிலையில், ஒரு மாணவர் முதலில் உள்ளே இறங்கி சுத்தம் செய்ய முயன்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த மற்ற மாணவர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஒருவர் பின் ஒருவராக தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.
இவ்வாறு மொத்தம் 5 மாணவர்கள் தொட்டிக்குள் சென்ற நிலையில், அவர்களும் மயக்கமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, 5 பேரையும் தொட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அனைவரும் மதுரா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் பரிசோதித்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர்கள் 17 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணியையும் போலீசார் மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய ருத்ரா என்ற மாணவர் முதலில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் தற்போது சுயநினைவுடன் இருப்பதுடன், மருத்துவர்களிடம் பேசும் நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
தொட்டிக்குள் நச்சு வாயு உருவாகியிருந்ததன் காரணமாக மாணவர்கள் மயங்கி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குருகுலத்திற்கு தேவையான அங்கீகாரம் இருந்ததா, மாணவர்களை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய அனுமதித்தது ஏன், விபத்து ஏற்பட்ட சூழல் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
மேலும், அந்த பகுதியில் செயல்படும் பிற குருகுலங்களிலும் மீண்டும் ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா என்பதும் சோதிக்கப்பட உள்ளது. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாணவர்களின் குடும்பத்தினர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read: வீட்டில் 150 சவரன் நகை மாயம்.. குழந்தையுடன் காணாமல் போன மனைவி கேரளாவில் கைது



