இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டுகள் நமது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இருப்பினும், அவற்றின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பதை உணர்த்தும் பல சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வகையில், கனடாவில் 16 வயது சிறுவன் ஒருவன் ‘கிளாட் ஏஐ’ (Claude AI) வழங்கிய வழிகாட்டுதலை நம்பி, ஆபத்தான மலைப்பகுதியில் சிக்கிக் கொண்டு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் உள்ள க்ரூஸ் மலையில் (Grouse Mountain) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிடிவி நியூஸ் (CTV News) தகவலின்படி, 16 வயது சிறுவன் ஒருவன் காலை 8 மணி அளவில் கோண்டோலா (Gondola) மூலம் க்ரூஸ் மலைக்குச் சென்றுள்ளான். அங்கிருந்து கிரவுன் மலைக்கு (Crown Mountain) செல்வதற்கான வழியைத் திட்டமிட ஆண்ட்ரோபிக்கின் ‘கிளாட் ஏஐ’ (Claude AI) உதவியை நாடியுள்ளான்.
ஏஐ காட்டிய தவறான பாதை: ஏஐ உருவாக்கிய வழியின்படி, அந்தச் சிறுவன் கிரவுன் பாஸ் (Crown Pass) வழியாக க்ரேட்டர் ஸ்லாப்ஸ் மற்றும் கிரவுன் கௌலியர் (Crater Slabs and Crown Couloir) பகுதியை நோக்கிச் சென்றுள்ளான். அப்போது குறிப்பிட்ட சில இடங்களில், அந்த ஏஐ வழிகாட்டுதல் அவனை செப்பனிடப்பட்ட சரியான பாதையிலிருந்து திசை திருப்பிவிட்டுள்ளது.
இதனை உணராமல் சிறுவனும் ஆபத்தான கரடுமுரடான பாதையில் தொடர்ந்து பயணித்து, ‘விடோமேக்கர் அரீட்’ (Widowmaker Arete) பகுதியின் இறுதிக் கட்டச் சுவரை அடைந்துள்ளான். தான் மிகவும் ஆபத்தான நிலையில் மாட்டிக்கொண்டதை உணர்ந்த அவன், உடனடியாக உதவிக்காக அவசரத் துறையைத் தொடர்புக் கொண்டுள்ளான்.
உயிர் பிழைத்த சிறுவன் – அதிகாரிகளின் எச்சரிக்கை:
இதையடுத்து ‘நார் சோர் ரெஸ்க்யூ’ (North Shore Rescue) மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து சென்று அந்தச் சிறுவனை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து பேசிய மீட்புக்குழு மேலாளர் பால் மார்க்கி (Paul Markey), அந்தச் சிறுவன் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து கால் தவறி விழுந்திருந்தால் கடுமையான காயங்கள் அல்லது மரணம் கூட நேர்ந்திருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “கிளாட் ஏஐ இதுவரை அந்த குறிப்பிட்ட பகுதிக்கு நேரில் சென்றதில்லை, எந்த மலையேற்றப் பாதையிலும் பயணித்ததும் கிடையாது. வெளிப்புற சூழல் குறித்து அதற்கு எவ்வித உண்மையான அனுபவமும் இல்லை. எனவே, எப்போதுமே உங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்யுங்கள், உரிய பயிற்சிகளைப் பெற்று வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்” என்றார்.
உட்புறச் சுவரேறும் (indoor climbing) கலையில் சிறுவனுக்கு ஓரளவுக்கு அனுபவம் இருந்தாலும், திறந்தவெளி இயற்கை மலைப்பகுதிகளில் ஏறி அவனுக்கு இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொழில்நுட்பத்தை அப்படியே நம்புவது எந்தளவிற்கு ஆபத்தானது என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.



