அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உயர்கல்வி நிறுவனமான கொலராடோ டென்வர் பல்கலைக்கழகம் (CU Denver), இந்தியாவின் ஹைதராபாத் நகரில் தனது புதிய வெளிநாட்டு வளாகத்தை அமைக்கவுள்ளது. இந்தியாவில் பட்டங்களை வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ள முதல் அமெரிக்கப் பொதுப் பல்கலைக்கழகம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் நுழையும் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான விருப்பப் பட்டயத்தை (Letter of Intent – LoI) இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவான UGC வழங்கியுள்ளது.
படிப்புகள் என்னென்ன?
தெலங்கானா மாநிலத்தில் அமைக்கப்படும் இந்த முதல் சர்வதேச வளாகத்தில், தற்கால வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகமாக உள்ள வணிகவியல் (Business), கணினி அறிவியல் (Computing), பொறியியல் (Engineering) மற்றும் தரவுப் பகுப்பாய்வு (Analytics) போன்ற துறைகளில் பட்டப் படிப்புகள் வழங்கப்படவுள்ளன. மேலும், இரண்டாம் ஆண்டிலிருந்து கூடுதல் படிப்புகளை அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் வெளியீட்டு அறிக்கையில், “மாணவர்களை உயர் திறன் கொண்ட தொழில் வல்லுநர்களாகவும், புதுமையான சிந்தனையாளர்களாகவும், உலகளாவிய தலைவர்களாகவும் மாற்றுவதே எங்களின் நோக்கமாகும். அமெரிக்காவிலுள்ள முதன்மைக் வளாகத்தின் அதே தரமான அனுபவத்துடன், இந்தியாவில் உள்ள மாணவர்களும் உலகளாவிய அளவில் சாதிக்கத் தேவையான சூழலை இது உருவாக்கிக் கொடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை எப்போது?
ஒழுங்குமுறை நடைமுறைகள் மற்றும் கல்வி, தொழில்துறை சார்ந்த மற்ற தரப்பினருடன் கலந்தாலோசித்து வளாகத்தை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி பணிகள் நடந்தால், 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்துப் பேசிய கொலராடோ டென்வர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கென்னத் டி. கிறிஸ்டென்சன் (Kenneth T. Christensen), “உயர்தரக் கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே எங்கள் பல்கலைக்கழகத்தின் நீண்டகால நோக்கமாகும். பல தசாப்தங்களாக எங்களுடன் இணைந்து பயிலும் இந்திய மாணவர்களுடனான எங்களது பிணைப்பை இது மேலும் வலுப்படுத்தும். கடுமையான கல்வி நெறிமுறைகள் மற்றும் நடைமுறை அனுபவங்களை இந்திய மாணவர்களுக்கும் நேரடியாக வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
பல்கலைக்கழகத்தின் பின்னணி:
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில் அமைந்துள்ள இந்த அரசுப் பல்கலைக்கழகம் 1912 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொலராடோ பல்கலைக்கழக அமைப்பின் கீழ் இயங்கி வரும் இது, 1973 ஆம் ஆண்டில் தனிச்சிறப்புமிக்க சுதந்திரமான பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.



