கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அமைந்துள்ள திருச்சிற்றம்பலமுடையான் நடராஜர் கோவில், தமிழகத்தில் மிகுந்த பக்தி மரபுகளும் தனித்துவமான வழிபாட்டு முறைகளும் கொண்ட முக்கிய சிவாலயமாக விளங்கி வருகிறது. இக்கோவில், சாதாரண வழிபாட்டு தலங்களை விட மாறுபட்ட ஆன்மிக அனுபவத்தை பக்தர்களுக்கு வழங்கும் சிறப்பு தலமாக கருதப்படுகிறது.
இந்த கோவிலின் மிக முக்கியமான தனிச்சிறப்பாக “மனுநீதி முறைப்பெட்டி” அமைப்பு உள்ளது. பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை தாளில் எழுதி அந்தப் பெட்டியில் செலுத்தி, அருகிலுள்ள மணியை மூன்று முறை அடித்து இறைவனிடம் தங்களது வேண்டுதலை சமர்ப்பிக்கும் வழிபாட்டு முறை இங்கு நடைமுறையில் உள்ளது.
பக்தர்கள் எழுதிய கடிதங்கள் தீட்சிதர்களால் வாசிக்கப்பட்டு, இறைவனிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் தீயில் எரிக்கப்படும் மரபும் இங்கு பின்பற்றப்படுகிறது. இது பக்தர் மற்றும் இறைவன் மட்டுமே அறிந்த ஒரு ஆன்மிக உரையாடலாக கருதப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு, பக்தர்கள் மீண்டும் வந்து நன்றி கடிதம் எழுதி சமர்ப்பிப்பதும் வழக்கமாக உள்ளது.
இந்த கோவிலின் கட்டிடக் கலை மற்றும் தெய்வ அமைப்பும் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. சுமார் 10 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட நடராஜர் சிலை இங்கு அமைந்துள்ளது. அருகில் 7 அடி உயர அம்பிகை திருமேனியும் அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்கள் நேரடியாக காட்சி தருவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். மேலும், இங்கு திருமூலர் நாயன்மார் காட்சி தருவது மற்ற சிவாலயங்களில் காணப்படாத தனித்துவமாகும்.
அதேபோல், பத்து கரங்களுடன் கூடிய அரிதான தசபுஜ பைரவர் இங்கு அமைந்துள்ளார். ஒரே கல்லால் செதுக்கப்பட்ட நவகிரக மண்டபத்தில் மையத்தில் சூரியனும், சுற்றிலும் எட்டு திசைகளில் மற்ற கிரகங்களும் தவக்கோலத்தில் அமைந்துள்ளன.
பஞ்ச சபைகள் தலங்களுக்கு அப்பால், இக்கோவில் “பளிங்கு சபை” என அழைக்கப்படும் ஆறாவது சபையாக கருதப்படுகிறது. மேலும், நாயன்மார்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளதால், இத்தலம் “திருத்தொண்டர் திருக்கோவில்” எனவும் அழைக்கப்படுகிறது.
Read more: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை.. திரையுலகில் அதிர்ச்சி..!



