‘வெற்றிப் பயணம்’ திட்டம்.. பெண்கள் பயணிக்கும் முன் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

TN BUS CM Vijay 2026

தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் தொடங்கியுள்ள நிலையில், 80 கி.மீ என்ற வரம்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரே பேருந்தில் 80 கி.மீக்குள் பயணம் செய்வது மட்டுமின்றி, வெவ்வேறு பேருந்துகளில் மாறி மாறி சென்றால் நீண்ட தூரத்தையும் இலவசமாக கடக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இதற்கான பதில், ஒருவர் பயணிக்கும் தூரத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அவர் ஏறும் குறிப்பிட்ட பேருந்தின் முழு வழித்தடத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்பதுதான். அதாவது, இலவசப் பயணம் வழங்கப்படும் பேருந்தின் மொத்த வழித்தட தூரம் 80 கி.மீக்குள் இருக்க வேண்டும்.

உதாரணமாக, சென்னையில் இருந்து சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிபுரம் செல்லும் 80 கி.மீக்குள் இயங்கும் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால் சென்னை முதல் வேலூர் வரை சுமார் 150 கி.மீ செல்லும் பேருந்தில் ஏறி, 75 கி.மீ மட்டுமே பயணம் செய்து காஞ்சிபுரத்தில் இறங்கினாலும் இலவசப் பயணம் கிடையாது. காரணம், அந்தப் பேருந்தின் முழு வழித்தட தூரம் 80 கி.மீக்கு அதிகமாக இருப்பதே ஆகும்.

அதே நேரத்தில், நீண்ட தூரத்தை பல பேருந்துகளாகப் பிரித்து பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரி செல்ல விரும்பும் ஒருவர், திட்டத்துக்கு தகுதியான பேருந்துகளில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளை மாற்றி பயணம் மேற்கொள்ள முடியும். இதனால் ஒவ்வொரு பேருந்துப் பயணமும் தனித்தனியாக திட்டத்தின் விதிமுறைக்குள் வந்தால், நீண்ட தூரப் பயணத்தையும் மேற்கொள்ள முடியும்.

ஆனால், பயணத்தின் தொடக்க இடமும் இறுதி இடமும் தமிழகத்துக்குள் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதியாக உள்ளது. வழித்தடத்தின் இடையில் புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசம் அல்லது அண்டை மாநிலப் பகுதி வந்தாலும், ஏறும் இடமும் இறங்கும் இடமும் தமிழ்நாட்டுக்குள் இருந்தால் திட்டத்தின் பலனைப் பெற முடியும். மாறாக, பயணி அண்டை மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ஏறினாலோ, அங்கு இறங்கினாலோ இலவசப் பயணம் கிடையாது.

இதன்படி, சென்னை முதல் புதுச்சேரி செல்லும் நேரடி பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியாது. பேருந்து புதுச்சேரி செல்லும் வழித்தடத்தில் இயக்கப்படுவதால், அந்தப் பயணம் திட்டத்தின் விதிமுறைக்குள் வராது. அந்தப் பேருந்தில் சென்னையில் ஏறி, புதுச்சேரிக்கு செல்லும் முன்பே கிண்டி போன்ற இடத்தில் இறங்கினாலும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

‘வெற்றிப் பயணம்’ திட்டம் மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும் பொருந்தாது. ஏசி பேருந்துகள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இந்த இலவசப் பயணம் கிடையாது.

சென்னையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கும் ஏசி பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டங்களில் நகர எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மொஃபசல் மற்றும் காட் ஆர்டினரி உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக பயணிகளுக்கு ‘Zero Ticket’ வழங்கப்படும். அதில் பயணம் தொடங்கும் இடம் மற்றும் சென்றடையும் இடம் பதிவு செய்யப்படும்.

திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பேருந்துகளை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், அந்தப் பேருந்துகளில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்கான ஸ்டிக்கரும் ஒட்டப்படும்.

அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களிடையே வரவேற்பு இருந்தாலும், 80 கி.மீ வரம்பு குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. நீண்ட தூரம் செல்லும் இளம் பெண்கள் பேருந்துகளை மாற்றி பயணம் செய்ய முடியும் என்றாலும், வயதானவர்கள் தொடர்ந்து பேருந்துகளை மாற்றுவது சிரமமாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

அதேவேளையில், பயணச் செலவை சமாளிக்க முடியாத பெண்களுக்கு இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்றும் பலர் வரவேற்றுள்ளனர். 80 கி.மீ வரம்பை மேலும் அதிகரித்தால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விழுப்புரம், திருச்சி போன்ற முக்கிய பகுதிகளுக்கும் பெண்கள் எளிதாக இலவசமாக பயணம் செய்ய முடியும் என்றும் பொதுமக்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திட்டம் தொடங்கியுள்ள நிலையில், எந்தெந்த பேருந்துகளில் இலவசப் பயணம் கிடைக்கும், 80 கி.மீ வரம்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது, அண்டை மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் வழியாகச் செல்லும் பேருந்துகளில் என்ன விதிமுறை என்பன குறித்து பயணிகள் தெளிவாக தெரிந்து கொள்வது அவசியமாகியுள்ளது.

Also Read: விஜய்யை மட்டும் ஏன் டார்கெட் செய்றீங்க?.. பிரகாஷ் ராஜுக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Saranya

Next Post

மகன், மருமகள் செய்த காரியம்.. ரூ.75 லட்சம் செலவில் கட்டிய வீட்டை விட்டு வாடகை அறையில் தவிக்கும் தம்பதி!

Thu Oct 8 , 2026
சொந்தமாக கட்டிய ரூ.75 லட்சம் மதிப்பிலான வீட்டை இழந்து, தற்போது சிறிய வாடகை அறையில் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர் வயதான தம்பதி. பெற்ற மகன் மற்றும் மருமகளால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த நிலைக்கு வந்ததாக அவர்கள் கண்ணீருடன் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. வயதான காலத்தில் தங்களுக்கென ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், பல ஆண்டுகள் உழைத்து பணத்தை சேமித்துள்ளனர் அந்த […]
21a3aa0d6ca1b15352b8f201cc38383779bf995d69b24842f7e7905ee548da28

You May Like