சமூக வலைதளங்களில் தன்னம்பிக்கை பேச்சாளராகவும் கல்வியாளராகவும் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வந்த பிரபல மலையாள யூடியூபர் நிஷா ரஃபேல் மீது, 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருச்சூர் மேற்கு காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைன் தளங்களில் அறிவுரைகளும் உத்வேகமும் பேசி வந்த பிரபலம் ஒருவர் மீது சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கேரளம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதாரப் பாடப் பிரிவில் ஆசிரியையாக பணியாற்றிய அனுபவம் கொண்ட நிஷா ரஃபேல், தனது தனித்துவமான கற்பித்தல் முறைகள் மற்றும் தன்னம்பிக்கை உரைகள் மூலம் இணையத்தில் பரவலான கவனம் பெற்றவர். இவருக்கு யூடியூபில் 1.27 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களும், இன்ஸ்டாகிராமில் 3.76 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களும் உள்ளனர். இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சூர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவனுக்குப் பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்டிருப்பது முதற்கட்ட மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள நிஷா ரஃபேல் தரப்பு, இது முற்றிலும் ஆதாரமற்ற பொய் புகார் எனக் கூறி வருகிறது. தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், தொடர்ந்து சாட்சியங்களை சேகரித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : வணிகர்களுக்கு குட் நியூஸ்! ஜிஎஸ்டி கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி! புது ரூல்ஸை அறிவித்த நிர்மலா சீதாராமன்!



