உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 3’ படத்தின் அதிகாரப்பூர்வ முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘இந்தியன் 2’ படத்தின் கலவையான விமர்சனங்களுக்குப் பிறகு, தற்போது இயக்குநர் ஷங்கர் இப்படத்தின் அடுத்த பாகமான ‘இந்தியன் 3’ பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், “சேனாபதி இஸ் பேக் வித் ஜீரோ டாலரன்ஸ். தி ரிசர்ஜென்ஸ் பிகின்ஸ் இன் இந்தியன் 3 – வார் மோட்” என குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரின் தோற்றம் யுத்தக் களச் சூழலைப் போல பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லட்சுமி சரவணக்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பின்போதே முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் மற்றும் விஎப்எக்ஸ் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்படம் 2027-ஆம் ஆண்டில் திரைக்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து, கல்கி 2 மற்றும் ரஜினிகாந்துடன் இணையவுள்ள புதிய படம் என பல முக்கிய திட்டங்களிலும் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.



