திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, முக்கிய இடங்களை எளிதில் கண்டறியும் வகையில் ‘கருடா மேப்’ (Garuda Map) அல்லது ‘வெங்கடாத்ரி’ என்ற பெயரில் பிரத்யேக டிஜிட்டல் வழிகாட்டி செயலியைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலியின் முதற்கட்டமாக, திருமலையில் உள்ள முக்கியக் கோயில்கள், அன்னப்பிரசாத வளாகம், இலவச பேருந்து நிறுத்தங்கள், குடிநீர் விநியோக மையங்கள், லட்டு கவுன்டர்கள் மற்றும் துணைக்கோயில்கள், தரிசன வழிகள், முடி காணிக்கை, பிரசாத இடங்கள், தங்கும் விடுதிகள், அன்னதான மையங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட இடங்கள் மேப்பில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த கட்டமாக மேலும் 100 இடங்களைச் சேர்த்து, நிகழ்நேர நிகழ்வுத் தகவல்களை வழங்கவும் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் அல்லது நுழைவு வாயில்களுக்கு வரும் பக்தர்கள், தங்கள் அனுமதிச் சீட்டு விவரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் அதற்கான சரியான பாதைகளை இந்தச் செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் ‘கோவிந்தா’ என்ற குரல் வழி உதவியாளர் (Voice Assistant), பக்தர்களுக்குத் தேவையான குரல் வழி திசைகள், தூரம், மதிப்பிடப்பட்ட நடக்கும் நேரம் மற்றும் வாகனப் பாதைகளைத் துல்லியமாக வழங்கும்.
மத்திய வரவேற்பு அலுவலகம் (CRO), உதவி மையங்கள், மருத்துவ உதவிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட தங்கும் இடங்கள் போன்ற வசதிகளையும் இந்தச் செயலியின் மூலம் எளிதில் சென்றடைய முடியும். மேலும், பக்தர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்திய இடத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் வசதியும் (Parking Memory), நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் செயல்படும் ஆஃப்லைன் வழிசெலுத்தலும் இதில் சிறப்பம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
இந்தச் செயலி தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிடப்படவுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத பக்தர்களின் வசதிக்காகத் திருமலையின் முக்கிய சந்திப்புகளில் 20 காட்சித் திரைகளும் நிறுவப்படவுள்ளன.



