பொதுவாக பூங்காக்கள் என்பது குழந்தைகள் விளையாடி மகிழவும், குடும்பத்தினர் ஓய்வாக நேரம் செலவிடவும் உருவாக்கப்பட்ட பொது இடங்களாகும். ஆனால் காலப்போக்கில் சில இடங்களில் அதன் நோக்கமே மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பூங்காக்களில் இளம் ஜோடிகள் மற்றும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருப்பதாக கூறப்படும் சிலர் அதிகளவில் கூடுவதால், குழந்தைகள் சுதந்திரமாக விளையாடவும், குடும்பத்தினர் நிம்மதியாக அமரவும் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், சிலர் பொதுஇடத்திற்கு ஏற்றதல்லாத செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக பல குளங்கள் புதுப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான வாளாங்குளம் கரையில் நடைபாதை, ஊஞ்சல், அமரும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இரவு நேரங்களில் இந்த பகுதி இளம் ஜோடிகள் மற்றும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருப்பதாக கூறப்படும் சிலரின் சந்திப்பு இடமாக மாறிவிட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சிலர் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால், அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பாதுகாவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் நள்ளிரவு 12 மணியளவில் மின்சார கேபிளை துண்டித்துக்கொண்டு இருந்தார். இதனை கவனித்த பாதுகாவலர்கள் வாலிபரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர், மீண்டும் அதே வாலிபர் 1 மணியளவில் துண்டிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள், இருளில் மறைந்திருந்த வாலிபரை கையும்-களவுமாக பிடித்துள்ளனர்.
இதையடுத்து, பாதுகாவலர்கள் அந்த வாலிபரை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர் 22 வயதான பிரசாத் என்பதும், கணபதி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இளைஞர் இளம் தம்பதிகள், கள்ளக்காதல் ஜோடிகள் லீலையில் ஈடுபடுவதை மறைந்திருந்து பார்க்கும் குணம் கொண்டவர் என்பது தெரியவந்தது. அவர்களின் லீலையை பார்க்கும்போது, இவரை யாரும் கண்டறிந்துவிடக்கூடாது என்பதற்காக மின்கேபிளை துண்டித்து லைட்டை நிறுத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரின் பைக், ஐபோன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Also Read: தினமும் இரவு இதை சாப்பிட்டு தூங்கிப் பாருங்க… மாற்றம் உங்களுக்கே தெரியும்!



