அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாததால் நார்வே நாட்டை கடுமையாகச் சாடியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எனக்கு எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக தனக்கு எட்டு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று சிராகியூஸ் நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் உரையாற்றிய ட்ரம்ப், நோபல் பரிசு தேர்வுக்குழுவைக் கடுமையாக விமர்சித்தார். “அமெரிக்காவின் சார்பாக நான்தான் இந்த நோபல் அமைதிக்கான பரிசைப் பெற்றிருக்க வேண்டும், ஆனால் தரவில்லை. நார்வே நாடும், வெட்கக்கேடான மற்றும் சங்கடமான முடிவை எடுத்த அந்த நபர்களும் நாட்டுக்கு ஒரு அழியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்” என்று அவர் கூறினார். மேலும், ஜனநாயகத்திற்கு எதிரான தீவிர இடதுசாரி சித்தாந்தவாதிகளால் நோபல் பரிசு தனது நம்பகத்தன்மையை முழுமையாக இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிக்கான பரிசு, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஐநா மனித உரிமைகள் துறை ஆணையர் நவி பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவை நிராகரித்த ட்ரம்ப், “ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும், யாருமே கேள்விப்பட்டிராத ஒரு தாராளவாத நபருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அந்த நபரை நான் கேள்விப்பட்டதே இல்லை, எவ்வாறாயினும் வாழ்த்துகள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
தனது உரையின் போது தான் தீர்த்து வைத்ததாக கூறும் மோதல்களை பட்டியலிட்ட ட்ரம்ப், அணு ஆயுதம் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் தான் 50 மில்லியன் (5 கோடி) மக்களின் உயிரைக் காப்பாற்றியதாகவும் பரபரப்பான கூற்று ஒன்றை முன்வைத்தார். மேலும், ஈரானை அணு ஆயுதம் பெறுவதில் இருந்தும், உலகளாவிய மோதல்களில் இருந்தும் தடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். உக்ரைன் மற்றும் ஈரான் விவகாரங்கள் உள்பட மேலும் இரண்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாதது குறித்து ட்ரம்ப் நீண்ட காலமாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, பதவியேற்ற முதல் ஆண்டிலேயே (2009) முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை அவர் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றில் தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பராக் ஒபாமா ஆகிய நான்கு அதிபர்கள் மட்டுமே நோபல் அமைதிக்கான பரிசைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



