இன்று வாக்கு எண்ணிக்கை.. தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் குவிப்பு.. பலத்த பாதுகாப்பு..!

vote counting

தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.. இந்த தேர்தலில் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவானது.. மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவப் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டங்களின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.


அங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களில், மூன்று அடுக்குகளாக போலீஸ் பாதுகாப்புடன் அவை வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் நேரடி கண்காணிப்புடன் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மொத்தம் 62 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட இருக்கின்றன. வாக்கு எண்ணும் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அதிகாலை 5 மணிக்கே மையங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் கட்சி முகவர்கள் உள்ளிட்டோர் மையத்துக்குள் செல்ல தனித்தனியான பாதைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதி வழங்கப்படும் நபர்கள் குறித்தும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நபர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் ஆகியோர் மட்டுமே முழுமையான சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை கட்டாயமாக அணிந்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக அதிகபட்சமாக 4 மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் வரை எண்ணும் வசதி செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும்.

ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் யார் முன்னிலையில் உள்ளார்கள் என்ற தகவல்கள் காலை 9 மணி முதல் தெரியவரத் தொடங்கும். இயந்திர வாக்குகள் குறைந்தது 14 மேஜைகளில் ஒரே நேரத்தில் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகின்றது. மேலும், ஒவ்வொரு மேஜையிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, முழு செயல்முறையும் பதிவு செய்யப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டூள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவ வீரர்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்குகளில் மாநில போலீசார், நான்காம் அடுக்கில் நுழைவாயில் பகுதியில் உள்ளூர் போலீசார் பணியாற்றுகிறார்கள். மொத்தத்தில், பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் மற்றும் தமிழக போலீசார் சேர்த்து சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையைப் பொருத்தவரை, 20,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குகள் மூன்று முக்கிய மையங்களில் எண்ணப்படுகின்றன. ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி உள்ளிட்ட 5 தொகுதிகளின் வாக்குகள் ராணி மேரி கல்லூரியில் எண்ணப்படுகின்றன. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளின் வாக்குகள் லயோலா கல்லூரியில் கணக்கிடப்படுகின்றன. விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட 5 தொகுதிகளின் வாக்குகள் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எண்ணப்படுகின்றன.

இந்த மூன்று மையங்களிலும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு மையத்திலும் இணை ஆணையர் ஒருவரின் மேற்பார்வையில் 3 துணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள் மற்றும் பல போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக போலீசார் காலை 6 மணிக்கே பணியில் சேர்ந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தேர்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களின் சுற்றுவட்டாரத்தில் 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரும், மையங்கள் முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பும் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. மேலும் தேர்தல் களத்தில் புதிதாக களமிறங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.. எனவே தமிழகத்தில் யார் ஆட்சியை அமைக்கப்போகிறார்கள் என்பது இன்று மதியத்திற்குள் தெளிவாகிவிடும்.

RUPA

Next Post

விஜய்க்கு அதிர்ஷ்டம்.. உதயநிதிக்கு சந்திராஷ்டமம்.. ஸ்டாலினுக்கு டைம் சரி இல்ல..! - தவெக ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு..

Mon May 4 , 2026
Lucky for Vijay.. Chandrashtama for Udhayanidhi.. Time is not right for Stalin..! - Thaveka Asthana Astrologer Prediction..
udhayanidhi stalin vijay tvk jpg 2 1

You May Like