ஆமத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் சென்னை மாவட்ட பெண்கள் அணி ஆதிக்கம் செலுத்தி, 21 தங்கப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. திருவள்ளூர் மாவட்ட அணி 11 தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் உள்ள ஏஏஏ பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் 42-வது மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனிப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
பெண்கள் பிரிவில் சென்னை மாவட்ட அணியினர் சிறப்பாகச் செயல்பட்டு 21 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினர். இதன்மூலம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் அந்த அணிக்குச் சென்றது. திருவள்ளூர் மாவட்ட அணி 11 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
போட்டியின் தொடக்க நிகழ்வில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாநிலச் செயலாளர் விஜய் பாபு முன்னிலை வகித்தார். செல்வம் எம்எல்ஏ, தொழிலதிபர்கள் பாலசுப்பிரமணியன், ஜவகர், ஏஏஏ பொறியியல் கல்லூரி செயலாளர் விக்னேஷ்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். போட்டிகளை விருதுநகர் மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர் ஜாகீர் உசேன், பொருளாளர்கள் ஹரிபாஸ்கரன், பூபாலகணபதி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முதல்வரும் விளையாட்டுத் துறை அமைச்சரும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த விஜய் பாபு, சிலம்பாட்டக் கழகத்துக்கும் அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விரைவில் அங்கீகாரம் வழங்கினால், சிலம்பாட்டத்தின் வளர்ச்சிக்கு மேலும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Also Read: புலிக் கூண்டுக்குள் நுழைந்த நபர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூர சம்பவம்! நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!



