கடன் தவணை வசூலிக்கச் சென்ற ஊழியர் கொடூரக் கொலை.. பனைத் தோட்டத்தில் புதைத்த கொலையாளி!

dc072ca0f4f0b726c8fbf48d0c44580a89610565d136b76c40e4c579424ce3bb

3 பவுன் தங்கச் சங்கிலியை அடகு வைத்த விவரத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, காணாமல் போன நிதி நிறுவன ஊழியரின் கொலை வழக்கில் முக்கியத் தடயத்தைக் கண்டுபிடித்துள்ளனர் ராமநாதபுரம் போலீசார். கடன் தவணை வசூலிக்கச் சென்றவர் மாயமான நிலையில், அவரது உடல் பனைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் வாளந்தரவையைச் சேர்ந்த பிரேம்குமார், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் தவணை வசூலிக்கும் பணியில் இருந்தார். கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வசூலுக்காகப் புறப்பட்ட அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததுடன், அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் தனியாகக் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

பிரேம்குமார் கடைசியாகச் சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, துத்திவலசையைச் சேர்ந்த காளிதாஸ் மீது போலீசாரின் கவனம் திரும்பியது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, கடன் தவணை நிலுவை தொடர்பாகப் பிரேம்குமார் தோப்புவலசைக்கு வந்த சமயத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்தது.

காளிதாஸின் வாக்குமூலத்தின்படி, தன்னைப் பற்றியும் தனது மகளைப் பற்றியும் பிரேம்குமார் ஆபாசமாகப் பேசியதால் ஆத்திரமடைந்து அவரை அரிவாளால் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை இரண்டரை அடி ஆழமுள்ள குழியில் புதைத்து, காய்ந்த பனை ஓலைகளால் மூடி மறைத்துள்ளார். பிரேம்குமாரின் செல்போன்களையும் அருகிலிருந்த குட்டையில் வீசியுள்ளார்.

கொலைக்குப் பிறகு பிரேம்குமாரின் 3 பவுன் தங்கச் சங்கிலியை அடகுக் கடையில் வைத்ததும் விசாரணையில் முக்கியத் திருப்பமாக அமைந்தது. இந்தத் தடயத்தைப் பின்தொடர்ந்த போலீசார், கொலை வழக்கில் காளிதாஸைப் பிடித்தனர். பின்னர் வருவாய்த் துறையினர் முன்னிலையில் புதைக்கப்பட்டிருந்த பிரேம்குமாரின் உடலைத் தோண்டி எடுத்து, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதற்கிடையே, இந்தக் கொலையில் ஒருவருக்கு மேல் தொடர்பு இருக்கலாம் எனப் பிரேம்குமாரின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். உடற்பயிற்சிக் கூடத்துக்குத் தினமும் சென்று வந்த வலிமையான உடற்கட்டைக் கொண்ட பிரேம்குமாரை ஒருவர் மட்டுமே கொலை செய்திருக்க முடியாது எனக் கூறி, மதுரை–தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காளிதாஸின் வாக்குமூலத்தில் கூறப்பட்ட தகவல்களுடன் மட்டுமே விசாரணையை முடிக்காமல், இந்தக் குற்றத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். கொலைக்கான முழுப் பின்னணி மற்றும் இதில் வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Also Read: வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. சென்னைக்கு 17ஆம் தேதி கனமழை எச்சரிக்கை!

Saranya

Next Post

மேடையில் முதல்வர் விஜய் செய்த சம்பவம்! உற்று கவனித்த பிரதமர் மோடி!

Sun Oct 11 , 2026
சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடியுடன் இணைந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ தூர வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த அவர், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள கல்வி நிதி மற்றும் முக்கிய […]
Modi Vijay 2026

You May Like