சென்னையில் வரும் 17ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், வங்கக் கடலில் உருவாகவுள்ள புதிய வானிலை அமைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த அமைப்பு புயலாக மாறுமா, தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழை எந்த அளவுக்கு தீவிரமடையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இதன் தாக்கத்தால், வரும் 13ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
தொடர்ந்து வலுப்பெறும் பட்சத்தில், இந்த வானிலை அமைப்பு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 17ஆம் தேதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், இது புயலாக உருவெடுக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாத நிலையில், வானிலை மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
இதற்கிடையே, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான காலமும் நெருங்கியுள்ளது. அக்டோபர் 15 முதல் 20ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாகக் கணித்திருந்தது. தற்போது வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மழையின் தொடக்கத்திலும் தீவிரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கெனவே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் சில இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை வழக்கமான அளவில் பெய்யுமா என்பது விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரம் வரை நீடித்தது. அந்தப் பருவத்தில் தமிழகத்தில் மொத்தம் 43 சென்டிமீட்டர் மழை பதிவானது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யாததால், வடகிழக்குப் பருவமழை கைகொடுக்குமா என்ற கவலை விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
அடுத்த சில நாட்களில் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வு மற்றும் வலிமையைப் பொறுத்து தமிழகத்தின் மழை நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Also Read: தங்க நகை வாங்குவதில் மெய்மறந்த தாய்.. துடிதுடித்து உயிரிழந்த 2 வயது குழந்தை!


