தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான புதிய திருத்திய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடற்கல்வி மற்றும் இணையதள கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் இந்த அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காலை 9:30 மணி முதல் மாலை 4:10 மணி வரை பள்ளிகள் செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய கால அட்டவணையின்படி, வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 நாட்கள் கல்வி சாரா பிற தனித்திறன் செயல்பாடுகளுக்கு (Extra-curricular activities) ஒதுக்கப்பட வேண்டும். எனினும், தேவைப்படும் பட்சத்தில் அந்த 2 நாட்களையும் உடற்கல்வி வகுப்புகளாகவே மாற்றிக் கொள்ளலாம் என்றும், இதன்மூலம் மாணவர்களுக்கு வாரத்தின் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடற்கல்வி வகுப்புகளை எந்த காரணத்தை கொண்டும் தவிர்க்கவோ, புறக்கணிக்கவோ கூடாது என தெரிவித்த அமைச்சர், மாணவ மாணவியர் விளையாட்டுகளில் ஈடுபட ஆசிரியர்கள் முழு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றார். மேலும், விளையாட்டில்கூட சாதி, மதம் போன்ற எந்தவொரு பாகுபாடும் பார்க்கக்கூடாது எனவும் அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
Read More : வரலாற்று சாதனை!. 5-வது முறை ஐசிசி விருது வென்று சுப்மன் கில் அசத்தல்! ஷஃபாலி வர்மாவிற்கும் விருது!



