வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (SIR) உட்பட பல்வேறு விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக குற்றம்சாட்டி, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்திய எதிர்க்கட்சிகள், தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், இந்தியா கூட்டணியை சேர்ந்த 11 முக்கிய தலைவர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்ற பதிவாளர் ஆய்வு செய்தார். அப்போது, தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 14 வகையான குறைபாடுகள் இருப்பதாக பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, நீதிமன்ற மனு கட்டணத்தில் 220 ரூபாய் குறைவாக செலுத்தப்பட்டுள்ளதாகவும், மனுதாரர்களில் ஒருவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டை நகல் தெளிவில்லாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரர்களின் விவரங்கள் மற்றும் இணைக்கப்பட்ட கூடுதல் ஆவணங்களிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 14 குறைபாடுகளையும் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்கும் வரை மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் பதிவாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Read More : குட் நியூஸ்! வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள்! புதிய அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்!



