புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ‘முண்டக்கண்ணு’ ஆனந்து (28). இவர் மீது பல்வேறு அடிதடி மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லித்தோப்பு பகுதியில் பாஜக பிரமுகர் விக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் சுமார் 2 மணியளவில் ஆனந்த் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலை, கிருஷ்ணா நகர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட ஆயுதக் கும்பல், திடீரென ஆனந்தின் வாகனத்தை வழிமறித்து சுற்றி வளைத்தது.
கண் இமைக்கும் நேரத்தில், அக்கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஆனந்தை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டுக் காயமடைந்த ஆனந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்திய அடுத்த சில நொடிகளிலேயே அக்கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியது.
பட்டப்பகலில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கண்முன்னே அரங்கேறிய இந்த பயங்கர சம்பவத்தை கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து உடனடியாக லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆனந்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
போலீசாரின் விசாரணையில், லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடியான சந்துரு என்பவருக்கும், கொல்லப்பட்ட ஆனந்துக்கும் இடையே அப்பகுதியில் “யார் பெரிய ரவுடி?” என்ற ஆதிக்கப் போட்டி நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக, சந்துரு மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த சில நாட்களாகவே ஆனந்தின் நடமாட்டத்தை நோட்டமிட்டு வந்துள்ளனர். இன்று அவர் தனியாக பைக்கில் சென்றதை உறுதி செய்துகொண்டு, நடுரோட்டில் வழிமறித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள லாஸ்பேட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள ரவுடி சந்துரு உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.



