சவப்பெட்டிக்குள் இருந்து திடீரென எழுந்து தண்ணீர் கேட்ட 15 வயது சிறுமியால், இறுதிச் சடங்குக்காகக் கூடியிருந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் குவாத்தமாலாவில் கவனம் பெற்றுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கி விழுந்த நிலையில், மூச்சு நின்றுவிட்டதாகக் கருதிய குடும்பத்தினர் சிறுமி உயிரிழந்துவிட்டதாக நினைத்துள்ளனர். இதையடுத்து, அவருக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகளையும் தொடங்கியுள்ளனர்.
சிறுமியின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு சுமார் 8 மணி நேரம் கடந்த நிலையில், எதிர்பாராத விதமாக அதற்குள் அசைவு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தபோது, சிறுமி திடீரென எழுந்து அமர்ந்து குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுள்ளார். உயிரிழந்துவிட்டதாக நம்பிய சிறுமி கண் விழித்துப் பேசியதைக் கண்ட குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இருப்பினும், சிறுமி உயிரிழந்ததாகக் கருதப்பட்டதற்கான காரணம், அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு மற்றும் மீண்டும் சுயநினைவு திரும்பியதற்கான மருத்துவ விளக்கம் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ ரீதியாக மரணத்தைச் சரியாக உறுதி செய்வதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் முன்னிறுத்தியுள்ளது.
Also Read: தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடா?.. விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன?



