கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை புல்லுவிளை பகுதியைச் சேர்ந்த அழகுவேல் – சுகன்யா தம்பதிக்கு 7 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் சுகன்யா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது இரண்டு பிள்ளைகளையும் ஈத்தாமொழியில் வசிக்கும் தனது தம்பி ராஜலிங்கம் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அங்கு சிறுவர்களுடன் ராஜலிங்கம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களது உடலில் ஆங்காங்கே தீக்காயங்கள் மற்றும் தழும்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சுகன்யாவிடம் போனில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டபோது அவர் சரியான விளக்கம் அளிக்காமல் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ராஜலிங்கம், சுசீந்திரம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த இரு குழந்தைகளையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையடுத்து சுகன்யாவை பிடித்து போலீசார் நடத்திய தீவிர கிடுக்கிப்பிடி விசாரணையில் கொடூர உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. சுகன்யா பள்ளிப் பருவத்தில் ஒன்றாகப் படித்த ரஞ்சித் குமார் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். அழகுவேலுடன் திருமணம் முடிந்த பின்னரும் தனது பள்ளிப்பருவ காதலனான ரஞ்சித் குமாருடன் கள்ளத்தொடர்பைத் தொடர்ந்துள்ளார். கணவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் ரஞ்சித் குமாரை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்த விஷயம் அழகுவேலுக்கு தெரியவரவே, குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சுகன்யா கணவரைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் மார்த்தாண்டம் பகுதியில் தனி வீடு எடுத்து ரஞ்சித் குமாருடன் அவர் குடும்பம் நடத்தி வந்துள்ளார். நாளடைவில் குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் தங்களின் தனிமை சுகத்திற்கு அவர்கள் இடையூறாக இருப்பதாக இருவரும் கருதியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யாவும் அவரது கள்ளக்காதலன் ரஞ்சித் குமாரும் சேர்ந்து பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் சிகரெட்டால் உடலின் பல இடங்களில் சூடு வைத்தும், கம்பால் சரமாரியாக அடித்தும் கொடூரமாக சித்ரவதை செய்து வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் தங்களின் இச்சைக்கு குழந்தைகள் முழு தடையாக இருப்பதாக நினைத்து, அவர்களை தம்பி வீட்டில் கொண்டுபோய் விட்டுச் சென்றது அம்பலமானது. இதனையடுத்து குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த சுசீந்திரம் போலீசார், சுகன்யா மற்றும் ரஞ்சித் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : வங்கக்கடலில் திடீர் திருப்பம்! அடுத்த 48 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்! தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!



