இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் இணையச் சேவையை தொடங்குவது தொடர்பாக பல்வேறு கருத்து மோதல்களும் விவாதங்களும் நடைபெற்று வரும் நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச நிறுவனத்துடன் நேரடிப் போட்டியை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும், அதேநேரத்தில் இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் அரசு கொள்கைகளுக்கு முழுமையாக உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் ரிலையன்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் வழி இணையச் சேவை வழங்கும் துறையில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதையும் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் மனதார வரவேற்பதாக ரிலையன்ஸ் கூறியுள்ளது. இது தொலைத்தொடர்பு துறையில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்களைத் தரும் என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய சந்தைக்குள் ஸ்டார்லிங்க் நுழைவதை உள்நாட்டு பெருநிறுவனங்கள் தடுப்பதாக எலான் மஸ்க் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த அறிக்கை அமைந்துள்ளது. அதில், இந்தியாவில் உருவாகும் எவ்வித வணிகப் போட்டியையும் கண்டு ரிலையன்ஸ் ஒருபோதும் அஞ்சியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு யார் மிகச் சிறந்த, தரமான சேவையை வழங்குகிறார்கள் என்பதை உறுதி செய்யும் உண்மையான களமே போட்டிகள் என்று ரிலையன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாமல், கடும் போட்டி நிறைந்த இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் புதிய நிறுவனமாக நுழைந்த ஜியோ, வெறும் பத்தே ஆண்டுகளில் 53 கோடிக்கும் அதிகமான பயனாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை மிக மலிவான கட்டணத்தில் இந்தியர்களுக்கு வழங்கி புரட்சி செய்துள்ளதை நினைவுகூர்ந்துள்ள அந்நிறுவனம், ஜியோ உட்பட ஒவ்வொரு நிறுவனமும் இந்திய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் நாட்டின் இறையாண்மை மற்றும் சட்ட விதிகளுக்கு தலைவணங்க வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது.



