தஞ்சை அருகே மஞ்சப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் விஜய் (20). அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகன் சுதர்சன் (19). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். இதில் விஜய் தஞ்சையிலுள்ள தனியார் கல்லூரியிலும், சுதர்சன் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியிலும் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தனர். சிறந்த கபடி வீரர்களான இருவரும் உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், செங்கிப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் கபடி போட்டியில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மஞ்சப்பேட்டையிலிருந்து புறப்பட்டுள்ளனர். வழியில் தேநீர் அருந்திவிட்டு போட்டி நடைபெறும் இடத்திற்குச் செல்ல திட்டமிட்டு, தஞ்சாவூர் – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அற்புதாபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் இவர்களது பைக் அதிவேகமாக மோதியது.
இந்த கோர மோதலில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட விஜய் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரும் பலத்த தலையாய காயங்களுக்குள்ளாகி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலை நேரத்தில் பலத்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக வல்லம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள வல்லம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : எந்த நாடு அதிக உணவை வீணாக்குகிறது தெரியுமா?. 2வது இடத்தில் இந்தியா!. ஜப்பானை பார்த்து கத்துக்கணும்!



