மனித குலத்தின் மிக அவசியமான தேவைகளில் உணவு முதலிடத்தைப் பிடித்திருந்தாலும், உலக அளவில் ஒவ்வொரு நாளும் பல கோடி டன்கன் கணக்கில் உணவு பெருமளவில் வீணடிக்கப்பட்டு வருகிறது. இது பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக மாறுவதோடு, மறுபுறம் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுவதையும் உலகளவில் மிகப்பெரிய முரணாகப் பார்க்க முடிகிறது.
சர்வதேச தரவுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) சமீபத்திய அறிக்கைகளின்படி, உலக அளவில் அதிகளவில் உணவு வீணடிக்கப்படும் நாடுகள் மற்றும் குறைந்த அளவில் உணவு வீணடிக்கும் நாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் தொகை மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தி அளவைக் கணக்கிடும்போது, சில முன்னணி நாடுகள் அதிக அளவு உணவை வீணடிப்பதில் முன்னணியில் உள்ளன. ஆண்டுதோறும் சுமார் 108 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உணவை வீணடிப்பதன் மூலம் சீனா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ( ஆண்டுக்கு சுமார் 76 கிலோ).
உலகளவில் அதிக உணவு வீணாகும் நாடுகளில் இந்தியாவும் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 78 மில்லியன் டன் உணவு இங்கு வீணடிக்கப்படுகிறது. எனினும், இந்தியாவின் பெருமளவிலான மக்கள்தொகையைக் கருத்தில் கொள்ளும்போது, ஆள்விகிதப் படி ஒரு நபர் ஆண்டுக்குச் சுமார் 54 முதல் 55 கிலோ வரை மட்டுமே வீணடிக்கிறார். இது பல நாடுகளை விடக் குறைவு என்றாலும், ஒட்டுமொத்த அளவு அதிகமாகும்.
சுமார் 24 மில்லியன் டன் உணவுடன் அமெரிக்கா இந்தப் பட்டியலில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது ( ஆண்டுக்கு சுமார் 73 கிலோ). பிரேசில் (சுமார் 20 மில்லியன் டன்), இந்தோனேசியா (சுமார் 14.7 மில்லியன் டன்), ஜெர்மனி, ரஷ்யா மற்றும் பிலிப்பீன்சு போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உணவு வீணாவதற்கு முக்கியக் காரணம் என்ன?
தொழிற்சாலைகள் அல்லது ஹோட்டல்களை விட, வீட்டு உபயோகத்தின்போதே அதிகப்படியான உணவு வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உலகளாவிய உணவு வீண்விரயத்தில் 60 சதவீதம் வீடுகளிலேயே நடக்கிறது (ஆண்டுக்கு சுமார் 631 மில்லியன் டன்கள்).
உணவு சேவைத் துறை (Food Service) மூலம் 28 சதவீதமும், சில்லறை விற்பனை மூலம் 12 சதவீதமும் வீணாகிறது. தேவையை விட அதிகமாகச் சமைப்பது, வாங்கிய பொருட்கள் பழுதாகிவிடுவது மற்றும் மிச்சமான உணவுகளை முறையாகப் பயன்படுத்தாமல் தூக்கி எறிவது ஆகியவை இதன் முக்கியக் காரணங்களாகும்.
எந்த நாடுகள் குறைந்த அளவு உணவு வீணடிக்கின்றன?
ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) தரவுகளின்படி, உணவு வீணாவதைக் கட்டுப்படுத்துவதில் சில நாடுகள் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. கடந்த 2000-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உணவு இழப்பு மற்றும் வீணாக்கப்படுவதை ஜப்பான் சுமார் 53 சதவீதம் வரை வெற்றிகரமாகக் குறைத்துள்ளது. இது உலக நாடுகளுக்குச் சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் உணவு வீணடிக்கும் அளவைக் கடந்த 2007-ஆம் ஆண்டைக் காட்டிலும் 22 சதவீதம் வரை குறைத்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும், ஆள்விகிதப் படி கணக்கிடும்போது பிலிப்பைன்சில் ஒரு நபர் ஆண்டுக்குச் சுமார் 26 கிலோ மட்டுமே உணவை வீணடிக்கிறார். இது பெரிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவாகும்.



