இன்ஸ்டாகிராமில் ஆடம்பர வாழ்க்கை, ஏழைகளுக்கு உதவும் வீடியோக்கள் எனப் பதிவிட்டு வந்த நபர் மீது, திருமணமான பெண் ஒருவர் நகை பறிப்பு மற்றும் அந்தரங்கப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதாகப் புகார் அளித்துள்ளார். தொழில் வளர்ச்சிக்கு உதவுவதாகக் கூறி அறிமுகமானவர், தன்னை ஏமாற்றி 11 சவரன் தாலிச் செயினைப் பெற்றுக்கொண்டதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் தீபக் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட தீபக், அந்தப் பெண்ணின் தொழிலை விரிவுபடுத்த உதவுவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய பெண்ணை, தொழில் தொடர்பாகப் பேச வேண்டும் எனச் சென்னைக்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து, செப்டம்பர் 4ஆம் தேதி நீலாங்கரையில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்கு அந்தப் பெண் சென்றுள்ளார். அங்கு அவருக்குத் தெரியாமல் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தீபக் தனது செல்போனில் பதிவு செய்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் நீச்சல் குளத்தில் குளிக்கச் செல்லலாம் எனப் பெண்ணை அழைத்துச் சென்ற தீபக், தண்ணீரில் நகைகள் தொலைந்துவிடும் என்று கூறி கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தாலிச் செயினைக் கழற்றித் தருமாறு கேட்டுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண் நகையைக் கொடுத்த நிலையில், அதைத் திருப்பிக் கேட்டபோது பிரச்சினை தொடங்கியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகையைத் திருப்பித் தருவதற்குப் பதிலாக, ஏற்கெனவே ரகசியமாகப் பதிவு செய்திருந்த அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி தீபக் மிரட்டியதாகப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசியல்வாதிகள், யூடியூபர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறித் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் வேறு வழியின்றி காவல்துறையை அணுகிய அந்தப் பெண், தனது நகையை மீட்டுத் தருவதுடன், மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் தீபக் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Also Read: முடி அதிகமா கொட்டுதா?.. உடம்புல இந்தச் சத்துகள் குறைவா இருக்கலாம்!



