வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தீவிர மூளை ரத்தப்போக்கு காரணமாக கோமாவுக்கு சென்று விட்டதாகவும் சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் நேற்று இரவு முதல் தகவல் பரவியது. சிலர் அவர் இறந்து விட்டதாகவும் கூறினர். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சீன ஜனநாயக கட்சியின் தலைவர் வான்ஜுன் ஸியே வெளியிட்டுள்ள பதிவில், கிம் ஜாங் உன் தீவிர மூளை ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்து விட்டார். அவரது உடல் வடகொரியாவுக்கு ரகசியமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அரசு வெளியிடாமல் மறைத்து வருகிறது.
கிம் ஜாங் உன்னின் மகளான கிம் ஜூ-ஏ வசம் ஆட்சி செல்லாமல், அவரது தங்கை கிம் யோ-ஜாங் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளார். வடகொரியாவில் உள்நாட்டு குழப்பம் வெடிக்காமல் தடுக்க 9,000 சீனப் படைகள் பியாங்யாங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறி இருந்தார்.
இந்த தகவல்களை வடகொரிய அரசு, சர்வதேச அமைப்புகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்பும் கிம் ஜாங் உன் மரணம் குறித்து பல தகவல்கள் பரவி, பின் அது வதந்தி என உறுதியானது. இப்போது பரவும் தகவலுக்கு முற்று புள்ளி வைக்க வடகொரிய ஊடகங்கள் நேற்று ஆடை கண்காட்சியை கிம் ஜாங் உன்னும் அவரது மகளும் பார்வையிடுவது போன்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளன.



