வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி மண்டலம் 14, 15 பகுதியில் உள்ள மழைநீர் செல்லக்கூடிய வடிகால்வாய் மற்றும் கெனால் பகுதிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை ஈசிஆர் ஓஎம்ஆர் இடையே உள்ள பக்கிங்காம் கால்வாய், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், மடிப்பாக்கம் வீராணம் ஓடை, ஓக்கியம் மடுவு ஆகிய பகுதிகளையும் பார்வையிட்டார். கடந்த சில ஆண்டுகளாக மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்தும், தற்பொழுது அந்த பகுதியில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகளிடம் அமைச்சர் விக்னேஷ் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகள் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மழைநீர் செல்லும் நீர்வழி தடங்களில் ஆக்கிரமிப்பு ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்தோம். 70% பணிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பணிகள் முடிந்து விடும்.
மக்கள் தங்கும் விடுதி, உணவு சமைக்கும் இடம், தங்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பேட்ஜ் ஒர்க் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நான் சென்னைக்கு மிகவும் புதுசு. நான் நேற்று தனியாக சென்று என்னவெல்லாம் நீர்வழி உள்ளது என்பதை தெரிந்துகொண்டேன். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பற்றி நானும் பார்த்தேன். அதை பற்றி எனக்கு முழுமையாக தெரியவில்லை. அதை தெரிந்துக்கொண்டு சொன்னால் நன்றாக இருக்கும்.
இயற்கையை எப்போதும் கணிக்க முடியாது. 20 செமீ மீட்டர் மழை வரும் என்று அதற்கான ஏற்பாடு செய்கிறோம். 30 செமீ மீட்டர் அளவுக்கு மழை வந்தால் கூட சமாளிக்க முடியும். அதற்கும் அதிகமானால் நம்மால் என்ன செய்ய முடியும்? என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.



