ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் மற்றும் காரப்பள்ளம் வனப்பகுதி வழியாக செல்லும் திம்பம் மலைப்பாதை மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், வனவிலங்குகளின் நடமாட்டம் எப்போதும் பரவலாக காணப்படும். குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிக்கு கரும்பு ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்துக் கரும்புகளைப் பிடுங்கி சாப்பிடுவதை அப்பகுதி காட்டு யானைகள் வழக்கமாக கொண்டுள்ளன.
இந்நிலையில், விடுமுறை தினத்தை முன்னிட்டு மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனப் போக்குவரத்து வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. அப்போது காரப்பள்ளம் வனப்பகுதியில் சாலையோரம் இருந்த காட்டு யானை ஒன்று, அவ்வழியாக வந்த கரும்பு லாரியை கண்டதும் கரும்பை எடுப்பதற்காக சாலையை நோக்கி ஓடிவந்தது. அந்த சமயத்தில் லாரியை முந்திச் செல்ல முயன்ற சொகுசு கார் ஒன்று யானையின் குறுக்கே சென்றதால் ஆத்திரமடைந்த யானை, காரை ஆக்ரோஷமாக சிறிது தூரம் துரத்திச் சென்றது. இதனால் காரில் இருந்த பயணிகள் பீதிக்குள்ளாகினர்.
தொடர்ந்து அந்த கரும்பு லாரியை வழிமறித்து நிறுத்திய யானை, அதிலிருந்த கரும்புக் கட்டுகளை லாவகமாகப் பிடுங்கி சுவைத்தது. அங்கிருந்த மற்றொரு யானையும் சாலையை அடைத்துக்கொண்டு கரும்புகளை ருசித்தது. வாகனங்களின் நெரிசல் அதிகரித்ததால், கரும்புகளை அவசர அவசரமாகப் பிடுங்கித் தின்ற யானைகள் நீண்ட நேரத்திற்குப் பிறகே நிதானமாக வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் சாலையை விட்டு அகன்ற பிறகே பிற வாகனங்கள் செல்றன.



