வெளிநாடுகளில் கைநிறைய சம்பளம், கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலம் போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி வெளிநாடு செல்லும் பொதுமக்களும் இளைஞர்களும், எதிர்பாராத கொடூர வலையில் சிக்கும் அவலம் அதிகரித்து வருகிறது. உலகளவில் சுமார் 5 கோடி மக்கள் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள சூழலில், மனித கடத்தல் கும்பல்கள் அப்பாவிகளை ஏமாற்றி வலைவீச தற்போது அதிநவீன ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன.
முன்பெல்லாம் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை தயாரிப்பது கடினமாக இருந்த நிலையில், தற்போது ஏஐ கருவிகள் மூலம் அசல் நிறுவனங்களின் விளம்பரங்கள் போன்றே தோற்றமளிக்கும் போலி வேலை அறிவிப்புகளையும், போலி இணையதளங்களையும் மிகக் குறைந்த செலவிலும் விரைவாகவும் குற்றவாளிகள் உருவாக்குகின்றனர்.
மேலும் டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பத்தின் மூலம் சமூக வலைதளங்கள் மற்றும் டேட்டிங் செயலிகளில் போலியான முகங்களை உருவாக்கி நட்பாகப் பேசி ஏமாற்றுவதுடன், தனிநபர்களைக் குறிவைத்துத் தானியங்கி முறையில் ஆயிரக்கணக்கான செய்திகளை அனுப்பித் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பொறியில் வீழ்த்துகின்றனர். இவ்வாறு வெளிநாடு செல்லும் நபர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிக்கப்பட்டு, அவர்கள் ஆன்லைன் மோசடி மையங்கள், கட்டுமானப் பணிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் துப்பாக்கி முனையில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
இருப்பினும், குற்றவாளிகள் பயன்படுத்தும் இதே ஏஐ தொழில்நுட்பமே தற்போது சர்வதேசக் புலனாய்வு அமைப்புகளுக்கும் காவல் துறைக்கும் அவர்களை கூண்டோடு பிடிக்கப் பெரிதும் உதவுகிறது. ‘வெப் கிராலர்ஸ்’ (Web Crawlers) போன்ற ஏஐ மென்பொருள்கள் மூலம் இணையத்தில் உலவும் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி எண்கள், கடத்தல் தொடர்பான புகைப்படங்களின் பின்னணி இருப்பிடங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய வங்கிப் பணப் பரிவர்த்தனைகளை துல்லியமாக கண்காணித்து கண்டறிய முடிகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும், மொழிப் பிரச்னையின்றி ரகசியமாக உதவி கோருவதற்கும் ‘யானஸ்’ போன்ற ஏஐ சாட்பாட்கள் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தேடும் நபர்கள், நிறுவனத்தின் நேரடி அலுவலகம் மற்றும் அதன் நம்பகத்தன்மையை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும். நம்ப முடியாத அளவுக்கு அதீத ஊதிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், சந்தேகமிருந்தால் அரசுத் தொழிலாளர் நலத்துறை அல்லது தூதரகத்தை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.



