தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குக் கடல் மார்க்கமாகப் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமம் ஒன்றில் இருந்து பெருமளவிலான தடைசெய்யப்பட்ட செயற்கை போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, இலங்கைக்குக் கடத்தப்பட உள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய உளவு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், கடந்த அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 5 கிலோ எடை கொண்ட 27 வெள்ளித் தகடு பொட்டலங்கள் அடங்கிய 6 டஃபிள் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப் பொட்டலங்களை ஆய்வு செய்தபோது, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட உயர்ரக ‘கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்’ (Methamphetamine) வகை வெள்ளை நிறப் படிக போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 137 கிலோ எடையுள்ள இந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், ஒரு பைக் மற்றும் விற்பனை வருவாயான ரூ.10 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, பிடிபட்ட 4 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியான சுகன் என்பவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தனிப்பட்ட டைரியிலும் காவல்துறையினரின் தொடர்பு குறித்த பகீர் தகவல்கள் வெளியாகின. வேளாங்கண்ணி டி.எஸ்.பி.யின் ஓட்டுநரான சிவக்குமார் மற்றும் வேளாங்கண்ணி காவல் நிலைய பெண் காவலர் சங்கீதா ஆகியோர் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதும் தெரியவந்தது. கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டின் கீழ், அந்த இரண்டு காவலர்களும் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு துறை ரீதியான தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More : வீட்டுக்கு வந்த பெயிண்டருடன் உல்லாசம்! வாக்கிங் சென்ற கணவரை அடித்து தூக்கிய கார்! பதபதைக்கும் சம்பவம்!


