விமான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை (VAT) அதிரடியாகக் குறைத்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு எடுத்த இந்த நடவடிக்கையின் மூலம், சென்னை விமான நிலையத்தில் VAT வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், மாநிலத்தின் பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் குறைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணை அறிவிப்பின்படி, இந்த வரி குறைப்பு அக்டோபர் 31/நவம்பர் 1 நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதுடன், சரியாக ஓராண்டுக்கு அதாவது அக்டோபர் 31, 2027 நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் இந்தச் சிறப்பான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விமானப் போக்குவரத்து துறைக்கு ஒரு வரவேற்புக்குரிய படியாக, விமான எரிபொருள் மீதான VAT வரியைக் குறைத்துள்ள தமிழக அரசின் முடிவை நான் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ” விமானப் பயணங்களை எளிமையாக்குவதற்கும், மலிவாக மாற்றுவதற்கும் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும். நமது கூட்டு முன்னுரிமை எப்போதும் பயணிகளாகவே இருக்க வேண்டும்” என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
இதேபோல், டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனமும் தமிழக முதல்வருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்ட பதிவில், “விமான எரிபொருள் மீதான VAT வரியைக் குறைத்துள்ளதற்காகத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கும், தமிழக அரசுக்கும் ஏர் இந்தியா தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. சென்னை விமான நிலையத்தில் 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் வரியைக் குறைப்பது விமானங்களின் இயக்கச் செலவைக் குறைக்கவும், விமான இணைப்புகளை மேம்படுத்தவும் பெரிதும் உதவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அக்டோபர் 1 முதல் உள்நாட்டு விமான நிறுவனங்களின் இயக்கச் செலவை அதிகரிக்கும் வகையில் விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் தரவுகளின்படி, ATF விலை லிட்டருக்கு சுமார் ரூ.16 உயர்த்தப்பட்டுள்ளதுடன், 19 கிலோ வணிக எல்பிஜி (LPG) சிலிண்டர் விலையும் ரூ.62.59 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான பெஞ்ச்மார்க் விலைகள் மற்றும் ரூபாய்-டாலர் மதிப்பு மாற்றங்கள் காரணமாக இந்த மாதாந்திர விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் 40 சதவீதம் வரை விமான எரிபொருளுக்காக மட்டுமே செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய விலை உயர்வின் மூலம், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான ATF விலை லிட்டருக்கு சுமார் ரூ.121-லிருந்து ரூ.137 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் லிட்டருக்கு ரூ.5-ம், செப்டம்பரில் ரூ.6.28-ம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் நுகர்வு, வழித்தடத்தின் நீளம் மற்றும் விமான இயக்கச் செலவுகளைப் பொறுத்து இந்த விலை உயர்வின் தாக்கம் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் மாறுபடும்.



