தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை நிலவி வரும் வளிமண்டல சுழற்சியில் இருந்து, கேரளா வழியாக வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதற்கான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக, இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மற்றும் உள் மாவட்டங்களிலும், சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கடலூர், நாகை, கரூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



