ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு இப்படி ஒரு ஆட்டமா? இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்த பாகிஸ்தான், ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. லாகூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருநாள் முத்தரப்பு தொடரின் இந்தப் போட்டியில், 242 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் கடைசி விக்கெட்டில் எட்டியது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 52 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணியை, சாம் கரன் மற்றும் பென் டக்கெட் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். சாம் கரன் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிலைத்து நின்ற பென் டக்கெட் சதமடித்து 105 ரன்கள் குவித்தார்.
இருப்பினும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் இங்கிலாந்து அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. ஒரு கட்டத்தில் 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த அந்த அணி, பின்னர் 187 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இறுதியில் கஸ் அட்கின்சன் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து அணி 241 ரன்களைச் சேர்த்தது.
242 ரன்கள் என்ற இலக்கை நோக்கிப் பாகிஸ்தான் களமிறங்கியபோது, அந்த அணிக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. 31 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், சையத் பைக் மற்றும் சல்மான் ஆகா ஆகியோரின் ஆட்டத்தால் ஓரளவு மீண்டது. சையத் பைக் 32 ரன்களும், சல்மான் ஆகா 26 ரன்களும் எடுத்தனர். ஆனாலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் பாகிஸ்தான் அணி 154 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
அப்போது களத்தில் இருந்த ஷதாப் கான், கடைசி வீரரான ஹாரிஸ் ரவூப்புடன் இணைந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். வெற்றிக்கு 88 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இருவரும் விக்கெட்டை இழக்காமல் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடினர். ஷதாப் கான் ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் விளாச, ஹாரிஸ் ரவூப் 19 பந்துகளில் 7 ரன்களுடன் அவருக்குத் துணையாக நின்றார். இருவரும் இணைந்து 89 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் 47.1 ஓவர்களில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கியமான சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. வெற்றிகரமாக இலக்கை விரட்டியபோது 10-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷன் என்ற சாதனையை ஷதாப் கான் – ஹாரிஸ் ரவூப் ஜோடி படைத்துள்ளது. மேலும், எட்டாவது வரிசை அல்லது அதற்குக் கீழே களமிறங்கிய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஒருநாள் ரன் எண்ணிக்கையாக ஷதாப் கானின் 113 ரன்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் ஒருநாள் போட்டியில் சதமடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷஹீன் ஷா அப்ரிடியும் பந்துவீச்சில் சாதனை படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 150 ஒருநாள் விக்கெட்டுகளை எட்டிய அவர், இந்த மைல்கல்லை 80 போட்டிகளில் கடந்த வேகமான பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஆனார். இதற்கு முன்பு வக்கார் யூனிஸ் மற்றும் சோயிப் அக்தர் ஆகியோர் தலா 91 போட்டிகளில் இந்தச் சாதனையை எட்டியிருந்தனர். ஒட்டுமொத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சக்லைன் முஷ்டாக்கைத் தொடர்ந்து, 150 விக்கெட்டுகளை வேகமாகக் கைப்பற்றிய இரண்டாவது வீரராகவும் ஷஹீன் அப்ரிடி திகழ்கிறார்.
தோல்வி உறுதி எனக் கருதப்பட்ட தருணத்தில் கடைசி விக்கெட்டின் உதவியுடன் இலக்கை எட்டிய பாகிஸ்தானின் இந்த வெற்றி, ஒருநாள் கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஆட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
Also Read: சிறுமி மாயமான வழக்கில் அடுத்தடுத்த கேள்விகள்.. தாய், சாமியார் மீது சிபிசிஐடி கவனம்!



