காவிரி நீர் விவகாரத்தில் புதிய சர்ச்சை..! “கர்நாடகாவுக்கே தண்ணீர் இல்லை” – பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய தேவகவுடா!

modi j1

பெங்களூரு: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கர்நாடகாவின் தண்ணீர் தேவைகள் குறித்து முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மழைப்பொழிவு குறைவால் நீர்த்தேக்கங்களில் பாதிப்பு!


நவம்பர் 2-ம் தேதி தேதியிட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள ஆறு பக்கக் கடிதத்தில், நடப்பு ஆண்டில் கர்நாடகா எதிர்பார்த்த அளவுக்கு மழையைப் பெறவில்லை என்று தேவகவுடா தெரிவித்துள்ளார். வழக்கமாக கிடைக்க வேண்டிய மழையில் சுமார் 60 சதவீதம் மட்டுமே இந்த ஆண்டு கிடைத்துள்ளதாகவும், இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மழைப்பொழிவு 35 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளதால், கர்நாடகாவில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்கள் அவற்றின் மொத்த கொள்ளளவில் 50 முதல் 55 சதவீதம் அளவிற்குக்கூட நிரம்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக விவசாயத்திற்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எதிர்ப்பு!

கர்நாடக அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லாத சூழலிலும், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகா தண்ணீர் திறக்க தொடர்ந்து உத்தரவிட்டு வருவதாக தேவகவுடா தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, வரவிருக்கும் கோடை காலத்தில் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அணைகளில் எஞ்சியுள்ள தண்ணீரைச் சேமித்து வைக்க அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா தரப்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அந்த கோரிக்கைகள் உரிய கவனம் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டால், கர்நாடகாவின் அணைகள் நீரின்றி வறண்டு போகும் அபாயம் இருப்பதாகவும், இதனால் எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சினையாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

குடிநீர் தேவைக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்!

தமிழகத்திற்கு விவசாயப் பயன்பாட்டிற்காக காவிரி நீர் தேவைப்படும் நிலையில், கர்நாடகா தனது மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தண்ணீரைச் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தேவகவுடா குறிப்பிட்டுள்ளார்.தேசிய நீர்க்கொள்கையின்படி குடிநீர் தேவைக்கே முதன்மையான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதால், கர்நாடகாவின் கோரிக்கைகளையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைக் கண்காணிப்பது மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என்றும், அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடும் அதிகாரம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி கோரிக்கை!

இதற்கிடையே, பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் எதிர்கால குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள மேகதாது குடிநீர் திட்டத்திற்கும் தேவகவுடா முக்கியத்துவம் அளித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் சில கருத்துகள் மற்றும் திருத்தங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்ட அந்த அறிக்கை, தேவையான விளக்கங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மேகதாது திட்டத்திற்கான விரிவான அறிக்கைக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் தேவகவுடா வலியுறுத்தியுள்ளார். காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், தேவகவுடா பிரதமருக்கு எழுதியுள்ள இந்தக் கடிதம் மீண்டும் அரசியல் மற்றும் நீர்வள விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

maha

Next Post

ரூ.5,000 கோடி கல்வி நிதி நிலுவை: மத்திய அமைச்சரை சந்தித்து தமிழக அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

Wed Nov 18 , 2026
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.5,000 கோடி சமக்ர சிக்ஷா அபியான் கல்வி நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து விவாதித்தார்.
rajmohan min 300x210 1

You May Like