வயது அதிகரிக்கும்போது தசைகளின் அளவும், வலிமையும் படிப்படியாகக் குறைவது இயல்பான மாற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த மாற்றம் முதுமையில் மட்டுமே தொடங்குகிறது என்று நினைக்க வேண்டியதில்லை. 40 வயதிலேயே தசை இழப்பு (Sarcopenia) தொடங்கலாம் என்றும், அதைத் தடுக்க வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வது முக்கியம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் ஜோர்டன் டி. மெட்ஸ்ல், வயது அதிகரிப்பால் ஏற்படும் தசை இழப்பை முழுமையாகத் தவிர்க்க முடியாவிட்டாலும், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த மூட்டு மாற்று மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் கசன்ஃபர் படேலும் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
40 வயதில் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது?
வயது அதிகரிக்கும்போது உடலின் தசைகளை உருவாக்கும் மற்றும் சேதமடைந்த தசைகளைப் புதுப்பிக்கும் திறன் குறையத் தொடங்குகிறது. ஹார்மோன் மாற்றங்களும் தசைகளைப் பராமரிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அதுமட்டுமின்றி, உடல் உழைப்பு குறைவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, போதுமான புரதம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, தூக்கமின்மை மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவையும் தசை இழப்பை வேகப்படுத்தக்கூடும் என டாக்டர் படேல் தெரிவித்துள்ளார்.
இதனால்தான் ஒரே வயதுடைய இருவரின் உடல் வலிமையும் உடற்தகுதியும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வயது மட்டுமே தசை இழப்பை தீர்மானிக்கும் காரணியாக இல்லை.
தசை வலிமை குறைவதை எப்படி கண்டுபிடிப்பது?
தசை இழப்பு ஏற்படுகிறதா என்பதை அறிய குறிப்பிட்ட அளவு எதுவும் இல்லை. அன்றாட வேலைகளைச் செய்வதில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பது முக்கியம்.
படிக்கட்டுகளில் ஏறுவதில் சிரமம், நாற்காலியில் இருந்து எழுவதற்கு அதிக முயற்சி தேவைப்படுவது, பொருட்களைத் தூக்குவதில் சிரமம், உடற்பயிற்சிக்குப் பிறகு மீண்டு வர அதிக நேரம் எடுத்துக்கொள்வது அல்லது முன்பு செய்த உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய முடியாமல் போவது போன்றவை தசை வலிமை குறைவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
40 வயதில் இதுபோன்ற மாற்றங்களை வெறுமனே “வயதாகிவிட்டதால் தான்” என்று அலட்சியப்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
1. வலிமைப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
தசை வலிமையைப் பராமரிக்க வாரத்திற்கு 2 முதல் 3 நாட்கள் strength training செய்வது உதவியாக இருக்கும். எடைகள், resistance bands அல்லது உடல் எடையைப் பயன்படுத்தி செய்யக்கூடிய பயிற்சிகளை, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப மேற்கொள்ளலாம்.
நடைப்பயிற்சி மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் இதயம் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு முக்கியமானவை. ஆனால் தசை வலிமையைப் பராமரிக்க அவற்றுடன் resistance training-ஐயும் சேர்த்துக் கொள்வது அவசியம்.
2. உணவில் புரதம் அவசியம்
உடற்பயிற்சி தசைகளுக்கு வலிமை பெறுவதற்கான தூண்டுதலை அளித்தாலும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்தும் முக்கியம். முட்டை, பால் மற்றும் பால் பொருட்கள், பருப்பு வகைகள், சோயா, மீன் மற்றும் கொழுப்பு குறைந்த இறைச்சி போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவரவர் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம். சப்ளிமென்ட்களை மட்டுமே நம்பாமல், சமச்சீர் உணவுடன் போதுமான புரதத்தைப் பெறுவது முக்கியம்.
3. தூக்கத்தையும் ஓய்வையும் புறக்கணிக்காதீர்கள்
உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகள் சீராகி வலிமை பெறுவதற்கு போதுமான தூக்கமும் ஓய்வும் தேவை. தொடர்ந்து தூக்கமின்மை, உடல் இயக்கம் குறைதல் மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாமை ஆகியவை தசை ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்.
மேலும், மூட்டு வலி அல்லது பழைய காயம் காரணமாக உடற்பயிற்சியை முற்றிலுமாக நிறுத்திவிடக் கூடாது. நீண்டகால வலி இருந்தால், அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனையுடன் கண்டறிந்து, பாதுகாப்பான முறையில் மீண்டும் உடல் இயக்கத்தைத் தொடங்குவது முக்கியம்.
தசைகளைப் பாதுகாப்பதன் நோக்கம் வெறும் உடல் அழகுக்காக மட்டுமல்ல. வயது அதிகரித்தாலும் உடல் வலிமை, சுறுசுறுப்பு, சமநிலை, சுயமாக அன்றாட வேலைகளைச் செய்யும் திறன் மற்றும் சுதந்திரமான வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டுசெல்ல தசை ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read: சென்னையில் முக்கிய இடத்தில் உருவாகும் பிரம்மாண்ட பேருந்து நிலையம்..! 40 ஆண்டுகால கனவு நனவாகிறது!



