நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது சாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை பெற்ற நிலையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
அப்போது ஆளுநர் ஆர்.என். அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விஜயைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால் அந்த விழாவில் “வந்தே மாதரம்” முதலில் ஒலிக்கப்பட்டதும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் ஒலிக்கப்பட்டது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் 4 பெண்கள் மற்றும் 7 பட்டியலினத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழக அரசியல் வரலாற்றில் அமைச்சரவையில் அதிக பெண்கள் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
ஆனால், இந்த பதவியேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வந்தே மாதரம் பாடலுடன் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இதனால் சமூக ஊடகங்களில் மீண்டும் விவாதம் வெடித்துள்ளது. “தமிழக அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏன் முன்னுரிமை இல்லை?” என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.
Read more: 19 மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநித்துவம் இல்லை.. 6 மாவட்டங்களில் 20 அமைச்சர்கள்..!



