புதுச்சேரியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் அரசுப் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலர் சரத் சௌகான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
காரைக்காலில் தொடங்கிய புகார்
கடந்த 2024-ஆம் ஆண்டு காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுப்பிரமணியன் பணியாற்றியபோது, அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 28 வயதுடைய திருமணமான பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர் புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு மேற்கு பிரிவு காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். இருப்பினும், பணியிட மாற்றத்திற்குப் பிறகும் சம்பந்தப்பட்ட பெண் காவலருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பித் தொந்தரவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்
இந்த விவகாரம் பெண் காவலரின் கணவருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர், கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து அவரது கணவர் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். பின்னர், மூத்த காவல் அதிகாரிகள் தலைமையில் நடத்தப்பட்ட உள்துறை விசாரணையில் புகாரில் முகாந்திரம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் தலையீடு
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து நீதிபதி வி. லட்சுமிநாராயணன் கடும் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து, கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றிருந்தார்.
தற்போது அரசுப் பணியில் இருந்தே நீக்கம்
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியனைப் பணியில் இருந்து முழுமையாக நீக்கி புதுச்சேரி தலைமைச் செயலர் சரத் சௌகான் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 75 மற்றும் 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் காவலருக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் தொல்லை தொடர்பான புகாரில், உயர் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



